Breaking
Tue. Dec 24th, 2024

வடமாகாணத்தில் அழிந்துபோய்க் கிடக்கும் தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளையும், வலயங்களையும் உருவாக்கல் தொடர்பில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து பாரிய திட்டமொன்றை மேற்கொள்ளும் வகையிலான பிரேரணை ஒன்றை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் முன்வைத்த போது அதற்கு இணக்கம் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மேற்கொண்டு அந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஏகமனதாக வேண்டினர்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று காலை (19) முல்லைத்தீவுக் கச்சேரியில் இடம்பெற்றபோது அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிஷாத் இந்தப் பிரேரணையை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தான் உத்தியோகபூர்வமாக கடிதமொன்றை எழுத தீர்மானித்துள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர்களும் மத்தியரசின் இந்த முயற்சிக்கு அந்தசபையின் ஆதரவை ஒட்டுமொத்தமாகப் பெற்றுத்தர வழிவகைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரினார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சிவமோகன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும், வடமாகாண சபை உறுப்பினர்களும் அமைச்சரின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு அதனை வரவேற்றுப் பேசினர்.

ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கிடையில் வடமாகண சபையுடன் இணைந்து தமது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த நிபுணர்கள் ஆகியோர் பங்குபற்றும் வகையில் முழு நாள் வேலைப்பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்து இதற்கான பூர்வாங்க திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடியுமென்ற ஆலோசனையையும் அமைச்சர் ரிஷாத் வழங்கினார்.

அழிந்துபோய்க் கிடக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற் சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற் சாலை மற்றும் இன்னோரன்ன தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அச்சுவேலியில் கைத்தொழில் வலயம் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும் அத்துடன் வட மாகாணத்தில் வளமான பகுதிகளை அடையாளம் கண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கும் இந்தப் பாரிய கைத்தொழில் பொருளாதாரத் திட்டம் வழிவகுக்குமென நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் இதன் மூலம் ஆகக் குறைந்தது 1 இலட்சம் பேருக்காவது தொழிலை வழங்க முடியுமென தெரிவித்தார். இந்தத் துறையில் முதலீடுசெய்வதற்கென ஆரம்பத்தில் வடமாகாண மக்களுக்கும், வடமாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களின் சில பிரதேசங்கள் கரும்புச் செய்கைக்கு உகந்ததென கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாவட்ட அபிவிருத்திச் சபை ஒப்புதலளித்தால் கரும்புச் செய்கையை இந்தப் பிரதேசத்தில் ஊக்குவித்து மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த முடியுமென்றார். கரும்புச் செய்கையில் ஆர்வம் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 2 ஹெக்டயர் வீதம் காணி வழங்க முடியுமெனவும் குறிப்பிட்ட அவர் 5000 ஹெக்டயரில் கரும்பு பயிரிடப்பட்டால், முல்லைத்தீவில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு வசதியாக அமையுமென்றார். கரும்பு உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பசளைகள் மற்றும் இன்னோரன்ன வசதிகளை முதலீட்டாளர்கள் செய்து கொடுப்பதற்கும், சாகுபடிபண்ணப்பட்ட கரும்பை உற்பத்தியாளர்களிடமிருந்து குறித்த விலைக்கே கொள்வனவு செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தையும், நாம் மேற் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கொண்டு ஜி.எஸ்.பி தொழிநுட்பத்தின் மூலம் வடமாகாணத்தின் பல பிரதேசங்களிலிருந்த மக்களின் காணிகளை வன பரிபாலனத் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலின் படி சுவீகரித்தமையை வாபஸ் வாங்கவேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அமைச்சர் ரிஷாத் கொண்டுவந்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் காணிகள் உடன் விடுவிக்கப்படுவதுடன் வன பரிபாலன திணைக்களத்திற்கு ஏதேனும் காரணத்துக்காக காணிகள் தேவைப் படும்பட்சத்தில் அரசாங்க அதிபரிடம் அது தொடர்பில் கோரிக்கைவிட முடியுமெனவும் அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசாங்க அதிபர் அது தொடர்பில் பிரதேசச் செயலாளர் ஊடாக குறிப்பிட்ட ஊர்களில் வாழும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து அது தொடர்பில் நியாயமான நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மாணித்தது.   

02 03

By

Related Post