– முனவ்வர் காதர் –
வடக்கில் மீள்குடியேறிவரும் மக்களை, யாணைகளின் அச்சத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி பிரதேசங்களில் பல பகுதிகள் யாணைகளின் அச்சுறுத்தலுக்கு மக்கள் உள்ளாக வேண்டிய சூழல் காணப்படுவதாகவும், பிரதேச மக்களின் விவசாய செய்கைக்கும் இந்த யாணைகளின் ஆக்கிரமிப்பு பெறும் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச அபவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகளால் தமக்கு தரப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மன்னாருக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் மேற்கொள்ள இருந்தபோது, அன்றைய கால நிலை மாற்றத்தினால் இந்த பயணம் பின்போடப்பட்டது.
வன ஜீவராசிகள், மற்றும் நிலையான அபிவிருத்திக்கான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவை வன்னி மாவட்டத்துக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.