தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றும் போது –
கடந்த காலங்களை போன்று இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கையினை நாம் எடுத்துவருகின்றோம். இந்த வகையில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மீனவர்கள் மற்றும் விவசாய,கால் நடை பிரச்சினைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் உரிய அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர்களை இப்பிரதேசத்துக்கு அழைத்துவந்து நேரடியாக உங்களது பிரச்சனைகளை அவர்கள் மூலம் தீர்த்து தர நடவடிக்கையெடுக்கவுள்ளேன்.இது தொடர்பில் அவர்களுடன் ஏற்கனவே முதல் சுற்றுப் பேச்சினை நடத்தியுமுள்ளேன்.
அத்தோடு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்குக்கான கொடுப்பனவு திட்டம் இங்கு வந்து சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்.அதேபோல் எமது மாவட்டத்தில் தொழிலின்றி இருக்கின்ற இளைஞர்,யுவதிகள் தொடர்பில் அதகமான கவனத்தை செலுத்தியுள்ளேன்.கடந்த காலங்களில் எம்மால் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டது போன்று எதிர்காலத்திலும் வழங்கப்படவுள்ள அரச நியமனத்தில் எமது மாவட்ட மக்களின் பங்கினை நிச்சயமாக உறுதிப்படுத்துவோம்.
எவ்வித பிரிவினைவாத சிந்தனைகளும் எம்மிடம் இல்லை.தேவையுள்ள அனைவரது எதிர்பார்ப்புக்களையும் நன்கறிந்தவன் என்ற வகையில் எனது பணியினை முன்னெடுத்துவருகி்ன்றேன்.
நானாட்டான் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் என்னிடம் தாயொருவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் எதிர்கொண்ட சங்கடத்தையும் கூறினார். அங்கு உபகரணங்களுக்கான பற்றாக்குறை இதற்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பிலும் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சருடன் வெகுவிரைவில் பேசவுள்ளேன்.
இம்மாவாட்டத்தில இருந்து இடம் பெயர்ந்த மக்களது மீள்குடியேற்றத்திற்கு எனது பங்களிப்பினை வழங்கிவந்துள்ளேன். மடு பிரதேசமாக இருந்தால் என்ன, மாந்தை பிரதேசமாகவும், முசலி பிரதேசமாகவும் இருந்தாலும் அங்கு தேவையானவற்றை முடியுமான அளவு பெற்றுக்கொடுத்துள்ளேன். இன்னும் இப்பிரதேச மக்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் நன்கறிந்தவன் என்ற வகையில் உரிய துறைக்கு பொறுப்பான அமைச்சர்களை இப்பிரதேசத்திற்கு அழைத்துவரவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், நானாட்டான் பிரதேச சபைகளின் உறுப்பினர்களான சஹாப்தீன், ஞானராஜ், அமைச்சரின் மன்னார் மாவட்ட பொதுசன தொடர்பு அதிகாரி ராஜன் மார்க், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.