மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை மீண்டும் அம்மக்களுக்கு பெற்று்க் கொடுப்பதற்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு வடக்கில் மன்னார் சிலவாத்துறையில் கடற்படைக்கான தளமொன்றினை பிரதேசத்தின் பாதுகாப்பு நோக்கம் குறித்து தற்காலிகமாக அமைக்கப்பட்டது.அதன் பிற்பாடு இது நிரந்தரமானதொரு முகாமாக மாற்றப்பட்டுவருகின்றது.
சிலவாத்துறையின் பிரதான சனநெருக்கடி மிக்க பிரதேசத்தில் இந்த முகாம் இருப்பதால்,வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரிதும் சிரமங்களை வர்த்தகர்களும்,பொதுமக்களும் எதிர்கொள்வதாக தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபாy சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது சிலவாத்துறையில் தற்பொது கடற்படையினரின் பாவனையில் உள்ள முகாம் அமைந்துள்ள பகுதியில் பாடசாலை.பள்ளிவாசல், மையவாடி,மற்றும் கடைத்தொகுதிகள், வீடுகள் பலதும் காணப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், தற்போது முஸ்லிம்கள் மீளகுடியேற்றத்திற்கு வருகின்றதால் இந்த கடற்படை முகாமை பிரிதொரு இடத்திற்கு மாற்றி இம் மக்களது காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதே வேளை வடக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவ்வாறு இரானுவ முகாம் அமைந்திருப்பின் அவற்றையும் அம்மக்களுக்கு விடுவித்து கொடுப்பதற்கு தெவையான ஆலோசனைகளை உரிய தரப்பினருக்கு வழங்குமாறும் அந்த கடிதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.