Breaking
Fri. Nov 22nd, 2024

-சுஐப் எம் காசிம் –

ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார சபைத்தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோரிக்கிடையே இன்று (4) மாலை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையின் பின்னரேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடலரிப்பினால் ஒலுவில் கிராமம் படிப்படியாக விழுங்கப்பட்டு வருவதாகவும் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆவணங்கள் மற்றும் விவரணப்படங்கள் மூலம் அமைச்சர் ரிஷாட் துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு விளக்கினார்.

அது மாத்திரமன்றி கடந்த வாரம் தமக்கு நிரந்தமான தீர்வு கிடைக்க வேண்டுமென ஒலுவில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி தாம் எதிர்நோக்கும் கஷ்டங்களையும் அவலங்களையும் வெளிப்படுத்தியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாரிய ஆபத்திற்குள்ளாகியிருக்கும் ஒலுவில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதெனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இந்த விடயத்தை தாம் வலியுறுத்திய போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

அம்பாறைக் கரையோரப் பிரதேச மக்களை இந்தக் கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதுடன் எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தை தனியார் துறையினரின் பங்களிப்புடன் விருத்தி செய்து அந்தப்பிரதேச மக்களினதும், நாட்டினதும்  பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் அவசியத்தை துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரனதுங்கவிடமும் மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீரவிடமும் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து அவர்கள் இணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து நீண்டகால தீர்வொன்றை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இதேவேளை கரையோரப் பாதுகாப்புத்
திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரபாத் சந்திரக்கீர்த்தியை அமைச்சர் ரிஷாட் சந்தித்து ஒலுவில் பேரபாயம் குறித்து எடுத்துரைத்துததுடன் எதிர்வரும் 11,12 ஆம் திகதிகளில் ஒலிவிலுக்குச் செல்லவிருக்கும் உயரதிகாரிகளுடன் பிரதிப்பணிப்பாளரும் இணந்து கொள்ள வேண்டுமென வேண்டினார். அமைச்சரின் வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஒலுவில் ஜும்மா பெரிய பள்ளிவாசல், நம்பிக்கையாளர் சபை, சமூக நல இயக்கங்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில மத்திய குழு என்பவை தமது கிராமத்தை பாதுகாத்து உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20160804-WA0025 IMG-20160804-WA0024 IMG-20160804-WA0023 IMG-20160804-WA0022

By

Related Post