Breaking
Mon. Dec 23rd, 2024

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கை ஒன்றினைக் கையளித்துள்ளது. இந்த அறிக்கை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என அமைச்சிர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று (06) கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்“ மற்றும் வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் வில்பத்து தேசிய வனத்துடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத பல பகுதிகளில் பூர்வீக வாழ்விடங்களை சட்ட ரீதியாக கொண்டு வசித்து வரும் முஸ்லிம்களையும் அங்கிருந்து வெளியேற்றுமாறும் தன்னை அமைச்சு பதவியிலிருந்து நீக்கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை வடபுல முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் எனது அமைச்சு பதவியை நானே இராஜினாமாச் செய்யத் தயாராகவுள்ளேன். எனது சமூகம் நடுத் தெருவில் நிற்க நான் அமைச்சு பதவியை அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

மேலும், நான் ஓர் இரா. சம்பந்தன் போன்று அல்லது , அநுரகுமார திசாநாயக்க போன்றேனும் வெளியே இருந்து கொண்டு எனது சமூகத்துக்காக பேராடத் தயாராக உள்ளேன்.

நான் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் சில சிங்கள ஊடகங்கள் என்மீது அபாண்டம் சுமத்தியுள்ளன. எனது மக்களின் மீள்குடியேற்றத்துக்கோ அல்லது அவர்களது வாழ்வாதாரத்துக்கோ இன்றைய அரசு எதனையும் செய்வதாக இல்லை. எனவே, எனது சமூகத்துக்கு ஏதாவது செய்யுங்கள் என்று வெளிநாட்டுத் தூதுவர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தினேன். இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கியது ஆடசியாளர்கள்தான்.

முஸ்லிம்களை மீள்குடியேறி வாழவும் விடுகிறார்கள் இல்லை. மீள்குடியேறியவர்களுக்கு வாழ்வதார வசதிகளை மற்றவர்களுக்குச் செய்வது போன்று செய்து கொடுக்கிறார்களும் இல்லை. இதுதான் இன்று எமது சமூகத்தின் கடைநிலை என மிகுந்த ஆத்திரத்துடனும், கவலையுடனும் அமைச்சர் ரிசாத் தெரிவித்தார்.

Related Post