அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார்.
அதிகாரபீடக் கூட்டம் நேற்று (28) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மற்றும் எமது தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் கண்டி உண்ணாவிரதத்தினால் நாட்டில் ஏற்படவிருந்த கலவரம் ஆகியவற்றை அடுத்து அனைத்து கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வகித்து வந்த அமைச்சு பதவிகளை சமூக நலன் கருதியும் நாட்டின் ஸ்திரத்தன்மை கருதியும் துறந்தனர்.
இந் நிகழ்வானது முழு முஸ்லிம் சமூகமும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைத்தது. இதனை அரசியல் அதிகார பீடம் நன்றியுடன் நோக்குகிறது.
தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது இனவாதிகளால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுப் பிரிவு பல்வேறு விசாரணைகளின் பின்னர் அவரை நிரபராதி என அறிவித்ததுடன் அந்த அறிவிப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராலும் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் தெரிவுக்குழுக்குழு விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையென தெரிவித்திருந்தனர்.
இதேவேளை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பெளசி தலைமையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பல்வேறு கட்டங்களில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக சாதகமான பல அடைவுகள் கிடைத்தன. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நஷ்ட ஈடு, டாக்டர் ஷாபி உட்பட அப்பாவி முஸ்லிம்களின் விடுதலை, அம்பாறை பள்ளிப் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இன்றிலிருந்து முடுக்கிவிடப்பட்டுள்ளது.
எனவே பதவி துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீளப் பொறுப்பேற்பதற்கு அரசியல் அதிகார பீடம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
தலைமையையும் முடக்க இனவாதிகள் மேற்கொண்ட சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.
நமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனை அமைச்சு பதவியை மீண்டும் பொறுப்பேற்க விடமாட்டோம் என இனவாதிகள் மேற்கொண்டுவரும் கூக்குரலுக்கு அஞ்சாமல் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பதன் மூலமே அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட முடியும் என கட்சியின் அங்கத்தவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
அதுமாத்திரமின்றி சமூகத்தின் இருப்பு, கெளரவம் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இந்த அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் எவ்விதமான குந்தகங்களையும் ஏற்படத்திவிடக்கூடாது என்பதில் கட்சி உறுதியாகவுள்ளது.
மீண்டும் அமைச்சு பதவிகளை கடந்த சனிக்கிழமை (20) பொறுப்பேற்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதும் பிரதமருடன் மேலும் ஒரு தீர்க்கமான சந்திப்பை மேற்கொண்ட பின்னர் பொறுபேற்பதென முன்னாள் அமைச்சர் பெளசி தலைமையில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் முடிவு செய்திருந்தனர். இந்த விடயம் ஜனாதிபதிக்கும் நேரடியாக எடுத்துச் சொல்லப்பட்டு இன்று (29) திங்கட்கிழமை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தமையையும் கருத்திற்கொண்டு அரசியல் அதிகார பீடம் இந்த முடிவை மேற்கொண்டது . என்று கட்சியின் செயலாளர் சுபைதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு