Breaking
Sat. Jan 11th, 2025

-அமீன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் அண்மையில் வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதித்தலைவர் ஜெமீல் கூறியதாவது,

நாம் இக்கட்டான ஒரு அரசியல் சூழ்நிலையில் வாழ்கின்றோம். எமக்காக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தற்பொழுது பெரும்பான்மைக் கட்சிகளுக்கு சோரம் போய், கட்சியின் நெறிதவறி, மக்களுக்கு பிரயோசனமற்ற வகையிலும் ஓர் இருவரின் சுயலாபத்திற்காகவும் இன்று பயணிக்கிறது .இப்படியான சூழலினாலேயே நாம் கட்சியை விட்டு விலகி சமூகத்தின் குரலாய் மக்கள் காங்கிரஸ் உடன் பயனிக்கிறோம் .

தலைவர் அஷ்ரபின் பாசாரையில் வளர்ந்த நாங்கள் அவரின் சமூகவியலை தொடர்ச்சியாக பின்பற்றுகிறோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஒரு தனிமனிதனுக்கான கட்சியாக மாறி, வெறும் பணத்திற்கு சோரம் போய் மக்களை அடகுவைத்து பிழைப்பு நடத்துகிறது.  இந்த நிலமைக்கு நாம் ஆளாகக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட எமது குரலை சர்வதேசம் வரை ஒலிக்க செய்ய வந்ததுதான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். .

நாம் தெளிவாக இருக்க வேண்டும் கறையான்கள் எம்மை தேர்தல் காலங்களில் அரிக்க முற்படும் அதுக்கு மயங்கிவிடாமல் நமது மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள், இம்முறை இறக்காமம் பிரதேச சபையை ஆட்சி செய்வதற்கு எமக்கு தாருங்கள். என்றும் இல்லாத அபிவிருத்திகளை நாம் இங்கு செய்ய திட்டமிட்டுள்ளோம். பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்களுக்கான தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நாங்கள் அம்பாறையில் ஏற்படுத்த இருக்கிறோம். தொழில் வாய்ப்புக்களை வழங்க இருக்கிறோம்.

உரிமைகள் பற்றி பேரினவாத சக்கிதிகளுக்கு சோரம் போகாத நாங்கள் எமது சமூகத்தின் குரலாய் என்றும் இருப்போம். வெறும் கொழும்பிலே உறங்கிக்கொண்டு இருக்கும் மாற்று கட்சியினரைப் போல் இருக்கமாட்டோம். ஏழைகளின் பசி அறிந்தவர் எங்கள் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

கடந்த பொதுத் தேர்தலிலே ஆட்சியை மாற்றுவதுக்கு நல்லாட்சியை முதலில் ஆதரித்தது நமது மக்கள் காங்கிரஸில்தான். எமது சமூகத்தின் தேவை என்னவென்று அறிந்த கட்சியின் தலமை அதை செய்தது. அதே தலமைதான் இன்றும் அம்பாறையில் அரசியல் மாற்றத்தை நோக்கிய பயணமாகவே இருக்கிறது. நாமும் இம்மாற்றத்தின் பங்குதாரராக வேண்டும். மக்கள் காங்கிரசை ஆதரிப்பதனாலயே எமது சமூகத்தின் வெற்றி இருக்கின்றது என்று கூறினார்.

 

 

Related Post