-ஊடகப்பிரிவு-
இன்று அதிகாலை (27) அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கடையொன்றுக்கு வருகை தந்த ஒரு சில பெரும்பான்மையினத்தவர்களால், கடை உரிமையாளர் மீதும் கடை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதம் தொடர்பில் அறிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஷேட பாதுகாப்பும் வழங்குமாறும், சம்பவத்தின் சூத்திரதாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
அமைச்சரின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த பகுதியில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், நிலைமை பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து, கிழக்கு மாகாணத்திற்கான பொலிஸ் மா அதிபரையும் தொடர்பு கொண்டு அமைச்சர் ரிஷாட் நிலைமைகளை விளக்கியுள்ளார்.
அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அம்பாறை மாவட்டத்தில், இனங்களுக்கிடையில முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதற்காக ஒரு சில இனவாத சக்திகள் மேற்கொள்ளும் இவ்வாறான முயற்சிகளின் போது, நாம் சமயோசிதமாக சிந்தித்து செயற்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.