-ஐ.ஏ.ஸிறாஜ் –
அம்பாறை மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்களின் சிவில் சமூக அமைப்பான காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியானது பேரினவாத செயற்பாடுகளினால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களது காணிகளை மீட்டுத்தருமாறு கோரியும் அது தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நோக்கிலும் கொழும்பில் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியது.
இதன் ஓர் அங்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது முஸ்லிம் கவுன்ஸிலின் தலைரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினரிடம் அம்பாறை மாவட்டத்தில் தற்போது காணப்படும் எட்டுக் காணிப் பிரச்சினைகள் பற்றிய ஆவணங்களும் அதன் மூலமாக பாதிப்புக்குள்ளானோரின் கோரிக்கைகளும் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டது. அத்துடன் பாதிப்புக்குள்ளானோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து காணி உரிமைக்கான அம்பாரை மாவட்ட செயலணியினர் தெளிவுபடுத்தினர்.
இதில் கலந்துகொண்ட செயலணியின் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுகையில், வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் காணிப் பிரச்சினைகளான பொத்துவில் மற்றும் லாகுகல எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வேகாமம், கிரான்கோவை மற்றும் கிரான்கோமாரி காணிப் பிரச்சினைகள் வனப்பாதுகாப்பு பிரதேசத்திற்கு உட்பட்டிருப்பதாக புதிதாக தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒலுவில் பொன்னன்வெளி மற்றும் அஷ்ரப் நகர் காணிப் பிரச்சினைகள். இக்காணிகளில் எந்த முறைமைகளும் பின்பற்றப்படாமல் இராணுவத்தினர் சிறிய முகாம் ஒன்றினை அமைத்துள்ளதுடன் வனம், தொல்பொருள், தீகவாபி புனித பூமி என பல காரணங்கள் கூறப்பட்டும் காணிகளை ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள கீத்துப்பத்து “பாவா புரம்” காணிப் பிரச்சினையானது கல்ஓயா அபிவிருத்தியின் கீழ் குடியேற்றப்பட்ட 18, 19 ஆம் கொலனி குடியேற்றத் திட்டங்களில் குடியேறியவர்களினால் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டுள்ளன. தமணை பிரதேசத்தில் உள்ள அம்பலம் ஓயா காணிப் பிரச்சினையானது கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மை சமூகத்தவர்களை திட்டமிட்டுக் குடியேற்றுவதற்காக பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகளாகும்.
மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இனவாதத்தின் காரணமாக பத்து வருடங்களுக்கு மேலாகியும் பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் காடாகிக் காணப்படுகின்றது.
இக் காணிப் பிரச்சினைகள் அனைத்திலும் 1200 இற்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பலவருடங்களாக கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் இலங்கை நாட்டில் உள்ள இனங்களிடையே பிரிவினையினையும், இனக் குரோதங்களையுமே உருவாக்கியுள்ளன. இவை அனைத்தும் நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும்.
அதன் மூலமே தேசிய நல்லிணக்கமும் நல்லாட்சியும் மலர வேண்டும் எனும் நம்பிக்கையில்தான் சிறுபான்மை மக்கள் இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையினை பாழாக்கி வெறும் கையுடன் அனுப்பும் வேலைகளையோ அல்லது கடந்த ஆட்சியாளர்கள் போல் பாரபட்சம் காட்டி வன்முறைக்கு தீனி போடும் செயற்பாடுகளையோ இந்த நல்லாட்சி மேற்கொள்ளாது என்பதில் இன்னும் எமக்கு நம்பிக்கை உள்ளது. புதிய அரசியலமைப்பில் குறிப்பாக சிறுபான்மையினத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படல் வேண்டும் எனவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் காணி உரிமைக்கான அம்பாரை மாவட்ட செயலணியின் தலைவர் கே.எல்.கைறுதீன், இணைப்பாளர் கே. நிஹால் அஹமட் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை, சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலனியின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஷ்கர்கான், உறுப்பினர் நியாஸ் ஆகியோரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், நிருவாக சபை உறுப்பினர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரான என்.எம்.அமீன் கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் எத்தனையோ முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும் இப்பிரச்சினைகள் அனைத்தும் நீண்ட காலமாக தீர்க்கப்படாது காணப்படுகின்றன. இதனை எண்ணி மனவேதனை அடைகின்றேன்.
இப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலே அம்பாறை மாவட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகள் சாத்தியமாகும். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொறுப்பானவர்களை ஒன்றிணைத்து நடவடிக்கைகள் எடுக்க முயற்சி எடுப்பதுடன் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்தி விரைவாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
அத்துடன் இந்தக் காணி விவகாரங்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தமது ஆர்.ஆர்.ரி. அமைப்பு தயாராகவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உறுதியளித்தார். இதற்குத் தேவையான ஆவணங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறும் அவர் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.