Breaking
Fri. Jan 10th, 2025

றியாஸ் ஆதம்

அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் தோற்றம் பெற்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் இம்மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் தையல் பயிற்;சி நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாரை மாவட்டத்தில் கால் பதித்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் எங்களுடைய கட்சி இம்மாவட்டத்தில் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்கின்ற விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அம்பாரை மாவட்டத்தில் சகல பிரதேசத்திலுமிருந்து எங்களுடைய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களது கட்சி இம்மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் இப்பிராந்தியத்திலே பல்வேறு அபிவித்திகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக இந்த மாவட்டம் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்தது ஆனால் அக்கட்சியினால் இம்மாவட்டத்தின் பல பிரதேசங்கள் அபிவிருத்தியில் புரக்கணிக்கப்பட்டிருப்பதனையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட பிரதேச மக்கள் அக்கட்சிக்கு மீண்டும் மீண்டும் ஆதரவு வழங்கி ஏமாற்றப்படுவதனை எமது கண்களினூடாக பார்க்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் அரசியல் வியாபாரமாக்கப்பட்டு ஏழை மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தேர்தலின்போது செல்வந்தர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்குகின்ற நிலமைகளே காணப்படுகிறது. இது எமது பகுதிகளிலே தான் அதிகமாகக் காணப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்திலே அதிகப்படியான மக்கள் ஆதரவினைப் பெற்ற கட்சி என மார்தட்டுகின்ற கட்சித் தலைவர்களுக்கு எதிராக மக்கள் பொம்மை கட்டி அடிக்கின்ற நிலமை உருவாகியுள்ளதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. இதற்கு காரணம் மக்களது உள்ளங்களில் வெறுப்புக்கள் ஏற்படுமளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. இவைகளை கருத்திற்கொண்டு மக்களை சாந்திப்படுத்துவதற்காக வெறும்; கட்சிப் பாடல்களைப் போட்டு மக்களை ஏமாற்ற முடியும் என்கின்ற அரசியல் தந்திரங்களை தலைமைகள் அறிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான கட்சிப் பாடல்களின் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. இந்த நவீன யுகத்தில் இவ்வாறான பாடல் சதி முயற்சிகள் ஒருபோதும் கைகொடுக்காது என்பதனை எமது சமூகம் இப்போதுதான் உணர்ந்திருக்கின்றது.

இன்று எமது சமூகத்தில் எவ்வளவோ பணிகளை செய்ய வேண்டிய தருவாயில் அரசியல் ரீதியான இடமாற்றங்களை செய்து பழிவாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அண்மையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்றைச் சேர்ந்த தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது. அரச உத்தியோகத்தர்களை தூர இடங்களுக்கு இடமாற்றி அவர்கள் படுகின்ற கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படுகின்ற நிலமை தோன்றியுள்ளது இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நிலைத்ததில்லை.
.

எங்களுடைய கட்சி எமது சமூகத்தினுடைய உரிமை, மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணித்து வருகிறது. தற்போதய காலகட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. இன்று எங்களுடைய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தினூடாக அம்பாறை மாவட்டத்தில் இருபது தையல் பயிற்சி நிலையங்களை நிறுவி சுமார் 400 யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இந்தப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களுடன் தையல் இயந்திரங்களையும் இலவசமாக வழங்கி வேலைவாய்ப்பற்ற யுவதிகள் தங்களது நாளாந்த வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். எனவும் தெரிவித்தார்

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, அக்கட்சியின் மருதமுனை நாற்பிட்டிமுனை இளைஞர் அமைப்பாளரும், தொழிலதிபருமான சித்தீக் நதீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம் முபீத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Post