பதினேழு வருடங்களாக பாராளுமன்றத் தேர்தலிலே, மாகாண சபைத் தேர்தலிலே மாநகர சபைத் தேர்தலிலே வாக்களித்த மக்கள் அந்தந்தக் காலகட்டத்திலே அபிவிருத்தி பற்றி மேடைகளிலேயே கேட்டிருந்தால், இப்போது தேவைப்படுகின்ற அபிவிருத்தியை எங்களிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு) கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.நெய்னா முஹம்மட் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கிளை அலுவலகத் திறப்பு விழா சனிக்கிழமை (06) மாலை இடம்பெற்றது. இங்கு பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
தனிக்காட்டு ராஜாவாக பதினெழு வருடங்கள் ஆட்சி செய்து வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குத் தேவையான எந்த அபிவிருத்திப் பணிகளையும் செய்யவில்லை. அதனால், இப்போது மக்கள் எங்களிடம் அபிவிருத்தி செய்யுங்கள் என்று கேட்கின்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். கடந்த மாகாண சபைத் தேர்தலிலே நான்கு உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்தீர்கள். மாநகர சபைத் தேர்தலிலே ஒட்டு மொத்த ஆட்சியை அவர்கள் கையிலே ஒப்படைத்தீர்கள். இவ்வாறு அத்தனையையும் பெற்றுக் கொண்டு எதையுமே செய்யவில்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில்தான் நாங்கள் வந்தோம். எங்களுக்கு 33000 வாக்குகள் கிடைத்தாலும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதி கிடைக்கவில்லை.
மாகாண சபையில் பிரதிநிதி இருக்கவில்லை. கல்முனை மாநகர சபையில் மட்டும் நட்பிட்டிமுனையில் இருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொடுத்து, சகல அங்கீராங்களும் வழங்கப்பட்டு மக்கள் கொடுத்த ஆணையைப் பெற்றவர்கள், கவனிப்பாரற்றுக் கிடக்கும் அபிவிருத்தியில்லாத இந்த வீதிகளுக்கு, இவர்கள் தான் ஜவாபுதாரிகளும், பொறுப்பதாரிகளும் என்பதை இன்றைய இளைஞர் சமூகமும், உலமாக்களும், ஊர்மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டத்திலே கல்வியலாளரும், எழுத்தாளருமான கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் உள்ளீட்ட பலர் கட்சியில் இணைந்து கொண்டனர். இங்கு பிரிதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமில், கே;.எம்.அப்துல் றஸாக், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா மற்றும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முஹம்மட்(2ஆம் வட்டாரம்), வை.கே.றகுமான் ;(3ஆம் வட்டாரம்), ஏ.எச்.ஏ.ழாஹிர்(4ஆம் வட்டாரம்), பஹ_ர்தீன் சிபான் (5ஆம் வட்டாரம்) ஆகியோருடன் பெரும் அளவிலான ஆதரவாளர்களும் கலந்தகொண்டனர்.