சுஐப் எம்.காசிம்
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவுகளினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ஆணவத்துக்கும் அப்பாவி முஸ்லிம்கள் சமூக பொருளாதார மற்றும் ரீதியில் நலிவடைவதற்கு பிரதான காரணமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு ஈஸ்ட் லெகூன் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட செயலமர்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
முன்னாள் உப வேந்தரும் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைதீன் ஹாஜியார் உட்பட கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை, பொத்துவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மருதமுனை நற்பிட்டிமுனை ஆகிய இடங்களிலிருந்து துறைசார் நிபுணர்களும் புத்திஜீவிகளும் இந்த செயலமர்வில் கலந்து, தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றி போது கூறியதாவது, தலைமைத்துவத்தைப் பாதுகாக்க எமக்கு ஒரு கட்சி தேவையில்லை சமுதாயத்தைப் பாதுகாக்கவே நமக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தவறான பாதையில் பயணித்ததனாலேயே நாம் கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையைத் தட்டிக்கேட்டோம். தலைமையின் பிழைகளை சுட்டிக்காட்டியதன் வெளிப்பாடே எம்மை கட்சியிலிருந்து வெளியேற்றக் காரணமாய் அமைந்தது.
கட்சித் தலைமையின் பிழையான முடிவுகளை தொட்டுக்காட்டினால் துரோகிகளாக தூக்கி எறியும் சாபக்கேடு இன்னும் தொடர்கிறது. பேரியலில் ஆரம்பித்து ஹசனலி வரை இன்று வந்து நிற்கின்றது. நாளை யாரோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம். அம்பாறை முஸ்லிம்கள் வாக்குகளை அள்ளிச்சொரிந்ததன் மூலம் பெற்றுக்கொடுத்த அரசியல் அதிகாரம் முஸ்லிம் சமூகத்துக்கு இற்றைவரை எந்தப்பயனையும் வழங்கவில்லை மர்ஹும் அஸ்ரபின் பாடல்களைப் போட்டுக் காட்டியும் கட்சியின் சின்னத்தை காட்டி மக்களை ஒரு மாயைக்குள் தள்ளி பெற்றுக்கொண்ட அதிகாரங்களால் அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு இற்றை வரை எத்தைய நன்மைகளை புரிந்திருக்கின்றார்கள் என உங்கள் மனச்சாட்சியைத்தொட்டுக் கேட்டுப்பாருங்கள்.
காணிப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நீங்கள் இங்கு உரையாற்றியபோது எனக்கு வேதனையாக இருக்கின்றது. கிடைத்த ஆணையைப் பயன்படுத்தி சமூகத்துக்கான கடமையைச் சரியாக செய்யாத காரணத்தினாலேயே இந்தப் பிரச்சினைகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கின்றது. மத்தியில் அதிகாரமுள்ள அமைச்சுப் பதவி, மாகாணத்தில் முதலமைச்சுப் பதவி அத்துடன் மத்தியிலே இன்னும் இரு துணை அமைச்சர்கள் இத்தனையும் இருந்தும் இந்த மக்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றனரே.
கிழக்கில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளிலே மலசலகூடச் சுவர் கரும்பலைகையாகவும் மரநிழல் பாடசாலைக் கூரையாகவும் இன்னும் இருக்கின்றனவே. தேர்தல் காலங்களில் உங்களை மயக்கி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தமது காரியங்களை கச்சிதமாக முடிக்கின்றனரே. தலைகளை எண்ணி-எண்ணி அரச இயந்திரத்துக்கு அதனைக் காட்டி மொத்த வியாபாரம் செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதாக அந்தக்கட்சிக்குள் இருப்போரே இப்போது தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் சமூகக்கட்சியென நம்பியிருந்த அது சமூகத்துக்கான சரியான வழிகாட்டலில் இருந்து தவறியதானாலேயே நாங்கள் புதுக்கட்சி ஆரம்பித்தோம். எமது கட்சியின் யாப்பில் தலைமைத்துவத்தின் ஆதிக்கத்தை மனம்போன போக்கில் கட்சிக்குள் சர்வாதிகாரமாக செலுத்த முடியாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறைவனுக்கு பொருத்தமாக நேரிய பாதையில் சமூகத்தை நோக்கிய பயணத்தில் தடம் பதித்து வருகின்றது. அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், எல்லை நிர்ணயம் ஆகிய அரசியல் மாற்றங்களில் கட்சிக்கென தெளிவான பாதையை வகுத்துள்ளோம். எல்லை மீள் நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் உச்ச நீதி மன்றத்தின் துணையை நாம் நாடவுள்ளோம். அதே போன்று சமூகப்பிரச்சினைகளை கையாள்வதிலும் சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் எமக்கு தெளிவான பார்வையும் திட்டங்களும் உள்ளன.
புத்திஜீவிகளான நீங்கள் அரசியலில் நாட்டம்காட்ட சில வேளை விருப்பம் காட்டாவிட்டாலும் இருந்தாலும் எமது கட்சியை வழிநடத்துவதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் உங்களுக்கு பூரணமான உரிமையுண்டு என்பதை நான் பகிரங்கமாக கூற விரும்புகின்றேன்.