ஒரு கடிதமே என் உயிரைக் காப்பாற்றியது” என கொஸ்லந்த மீரியபெத்த பால் சேகரிப்பு நிலையத்தின் ஊழியரொருவர் தனது திகில் அனுபவத்தை Tn குத் தெரிவித்தார்.
“நான் வழமையாக சேகரித்த பாலை, லொறியில் ஏற்றிவிட்டு பால் சேகரிப்பு நிலையத்திற்குள் வந்து விடுவேன். அன்றைய தினம் சாரதியிடம் கையளிக்க வேண்டிய கடிதமொன்றை எடுத்துவர மறந்தது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. சாரதியை கொஞ்சம் பொறுக் குமாறு கூறிவிட்டு நிலையத்திற்குள்ளி ருந்து கடிதத்துடன் வெளியே வந்ததுதான் தாமதம் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டதுடன் தூசி பறக்க மண் அப்படியே எம்மை நோக்கி வருவதைக் கண்டு நானும் சாரதியும் ஓட்டம் பிடித்து உயிர்த்தப்பினோம்.” எனக் கூறினார்.
அதே தோட்டத்தை சேர்ந்த ஆர். தேவி என்பவர், “அண்ணா, எனது மகளை காலையில் பாடசாலைக்கு கூட்டிச் சென்றதால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. இடிபாடுகளுக்கிடையிலிருந்து என்னை மட்டுமே உயிருடன் மீட்டார்கள். எனது அம்மாவையும் அண்ணியையும் மீட்க முடியவில்லை. நான் அநாதையாகி நிற்கின்றேன்” என கதறி அழுதார்.
“நானும் எனது மனைவியும் அதிகாலையிலேயே வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிவிடுவோம். நான் ஒரு பாடசாலையிலும் எனது மனைவி ஒரு வீட்டிலும் வேலை செய்கிறோம். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இருந்தும் இந்த கடைசி காலத்தில் நானும் எனது மனைவியும் தனித்து விட்டோம்” என கண்ணீர் மல்க கூறினார் பி. காமதேவன் (60).
சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்று தலவாக்கலையிலிருந்து தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களைத் தேடி அவ்விடத்துக்கு வந்த சின்னம்மா (32), “வீடு இருந்த இடமே தெரியவில்லை” என கதறி அழுதார்.
“12 வருடங்களுக்கு முன்னர் நான் திருமணமாகி தலவாக்கலையிலுள்ள எனது கணவர் வீட்டுக்கு சென்றேன். மண்சரிவு இடம்பெற்றதை கேள்வியுற்று இங்கு வந்தேன். ஏமாற்றம் மட்டும்தான். கோயில் பக்கத்தில்தான் என்னுடைய வீடு இருந்தது. கோயிலையும் காணோம். வீட்டையும் காணோம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை எல்லோருமே மண்ணோடு போயிவிட்டார்கள்” என கவலையுடன் கதறி அழுதார்.