Breaking
Wed. Jan 15th, 2025

இலங்கை முஸ்லிம்களது அரசியல் வரலாற்றில் கடும்போக்கு பெரும்பான்மைச் சக்திகளின் நெருக்குதல்களுக்கான ஓர் அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காணப்படுகின்றார்.

வன்னியைத் தளமாக ஆரம்பித்து, சமூகத்துக்கான பணியைச் செய்யத் தலைப்பட்ட இந்தத் தலைமைக்கு, பேரினவாதிகளின் நெருக்குதல்கள்தான் பெரும் விளம்பரங்களாகி வருவதாக, ஏனைய தலைமைகள் கிசு கிசுப்பதாகவும் ஊரூராகப் பேச்சு.

பெரும்பான்மை மொழி ஊடகங்களில் இவரின் பெயர் சொல்லாத செய்திகள் இல்லை. குற்றம் சுமத்துவதையே தொழிலாகக்கொண்டு இவ்வூடகங்கள் செயற்படுவதாக, சிறுபான்மைத் தளங்களில் பல பேச்சுக்களும் அடிபடுகின்றன. தேர்தல் காலத்தில் இவ்வாறு இத்தலைமைக்கு வரும் நெருக்குதல்கள் ஒரு வகையான அனுதாபத்தை அள்ளிக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

அப்படி என்னதான் செய்தார் இவர்? வௌியேற்றப்பட்ட மக்களுக்கு சொந்த இடங்களில் வீடுகளை அமைத்தார். அகதியாக வந்த மக்களுக்கு புத்தளத்தில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கினார். அகதியாக்கப்பட்டு மெனிக்பார்ம் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட தமிழ் சகோதரர்களை விடுவித்து, சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தினார். இவைகள்தான் இத்தலைமை செய்த வேலை. 52 நாள் அரசாங்கத்தில் ஆதரவளிக்காதமைக்குத்தான் இந்த அவலங்களாம். இது தலைவரைப்பற்றி அங்குள்ள சில தாய்மார்கள் பேசும் பேச்சு..

எதைச் செய்தாலும் என் பணி ஓயாதென்று ஒடித்திரியும் இவர், இந்த வாரம் முஸ்லிம்களின் முகவரியான அம்பாரை மாவட்டத்தில், பல கூட்டங்களில் கலந்துகொண்டார். இன்றைய கூட்டத்தில் எதைப் பேசுவதென்று யோசித்தவாறு மேடையில் இருக்கும்போதே, ஏதாவது செய்தி வந்துவிடும் இவருக்கு. “சகோதரர் மீது விசாரணை, சஹ்ரான் தப்பிக்க உதவி, வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம்கள் குடியேற்றம்” என்று பரபரப்புடன் வரும் செய்திகள், இவருக்கு பிரச்சாரத்திற்கும் உதவுகிறது போலுள்ளது. அஷ்ரஃபின் பிறப்பிடப் பிரதேசங்களில் இருந்தபோது இவருக்கு வந்த செய்திகள் கவலையளித்தாலும் மருதமுனை, கல்முனை, மாளிகைக்காடு, பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை பிரதேசங்களில் இவரது பேச்சுக்கள், மறைந்த தலைவரின் வீர வசனங்களை ஞாபகமூட்டியதாகக் கிழக்கிலிருந்து வரும் செய்திகளும் சொல்கின்றன.

“முஸ்லிம்கள் அடிபணிவது அல்லாஹ்வுக்குத்தான்.” வேறு எவருக்கும் எம்மால் சுஜூது செய்ய முடியாதென்று முழக்கமிட்ட இத்தலைவர், கிழக்கையே ஒரு குலுக்குக் குலுக்கினாராம். இந்தக் குலுக்கலில் ஏனையை கட்சிகளின் வாக்குகளும் படிப்படியாக மயிலை நாடி வருவதாகவும் சில தகவல்கள். பொறுத்திருந்தால் பொழுது புலர்ந்து, பிரதிநிதித்துவங்கள் யாருக்கு என்பதும் தெரிய வருமாம்.

26.06.2020 – Navamani

Related Post