Breaking
Sat. Nov 16th, 2024

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கண்ணகிபுரம் பொதுக் கட்டடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வறுமையில் காணப்படும் பிரதேசங்களுக்கு மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் ஊடாக இவ்வாறான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மக்களுடைய வறுமையை குறைக்கும் வகையில் யுவதிகளுக்கு தையல் பயிற்சியை நடாத்துகின்றோம். அத்தோடு பிள்ளைகளுடைய கல்விக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்;க்கின்றோம். எவரிடமும் கையேந்தாமல் நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும்.

இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம் அதனை வெற்றி பெற வைப்பதும் தோல்வி பெற வைப்பதும் உங்களுடைய கைகளில் தான் உள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலர் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறானவர்களுக்கு அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிவர்களுக்கு காலம் முழுவதும் கையேந்திக் கொண்டிருக்கின்ற நிலைமைதான் இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் அரசாங்கத்தையும், ஆண்டவனையும் ஏமாற்றி செய்கின்ற விடயத்தில் அவர்கள் வாழ்வில் சுபீட்சங்களை காண முடியாது என்றார்.

வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த பன்னிரண்டு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post