மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால், சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் என்ற அடிப்படையில், அரசாங்கத்தின் இவ்வாறான காட்டமான நடவடிக்கைகளை எதிர்த்து, குரல் கொடுக்கும் பணியில், இந்த சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினராகப் பதவியேற்ற பி.எம்.சிபான் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, நேற்று (27) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
நேற்றைய அமர்வில், கல்முனை மாநகர சபை பட்டியல் சுழற்சி முறை உறுப்பினராக பதவியேற்றிருந்த பி.எம்.சிபான் கன்னி உரையாற்றினார்.
தனது அறிமுகத்தினை மேற்கொண்ட மாநகரசபை உறுப்பினர் சிபான், தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த உயரிய சபையின் கௌரவ முதல்வர் அவர்களே! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ உறுப்பினர்களே! இந்த சபையின் ஏனைய கட்சிகளின் கௌரவ உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த உயரிய சபையிலே முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்தினை எனது கன்னி உரையில் நிகழ்த்துகின்றேன். அரசியலில் ஒன்றுவிட்ட தலைமுறை நான். கரைவாகு பற்று வடக்கு அபிவிருத்தி சபையில் அங்கம் வகித்த எம் .எஸ் .எம் அபூபக்கர் அவர்களின் பேரன் நான். BSc,LLB பட்டதாரி. ஆசிரியத்துக்கு இரண்டாம் தலைமுறை. எனது பெற்றோர் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.
கடந்து 2018 ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மருதமுனை ஐந்தாம் வட்டாரத்தில் போட்டியிட்டு 583 வாக்குகளை பெற்று இருந்தேன். எனது கட்சி சார்பாக தோல்வி அடைந்தவர்களில் கல்முனை ஒற்றை அங்கத்தவர் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப் பதிவு செய்திருந்தேன். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கிணங்க கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு வழி விட்டிருந்தேன். எனக்கும் இந்தப் பதவி நிலை நசீப் ஆக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்தப் பதவி நிலையை எனக்கு விட்டு தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் நைனா முஹம்மத் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து கூட்டங்களிலும்ஓடோடி வந்து பேசி ஊக்கப்படுத்திய குரலரசன் ARM ஜிப்ரி அவர்களை இந்த இடத்தில் நினைவு கூர்ந்து துஆச் செய்கின்றேன்.
எதிர்காலத்தில் இந்த சபையில் ஒற்றுமையோடும் உறுப்பினர்களாகிய உங்களோடும் சேர்ந்து பயணிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன். மாநகர சபையானது உள்ளுராட்சி அதிகார சபையின் மிகப்பெரிய அலகு ஆகும். இதன் வளர்ச்சியிலும் வினைத்திறனான செயல்பாட்டிலும் எமது பிராந்தியத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது. ஆகவே நமது மேயரின் நல்ல விடயங்களுக்கு என்றும் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்.
அத்தோடு, இந்த அவையின் கௌரவ மேயர் அவர்கள், கௌரவ உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், எனது அரசியல் பயணத்திற்கு எதிர்காலத்திலும் பூரண ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என திடமாக நம்புகின்றேன்.
இன்றைய நாளில் எமது கட்சியினுடைய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி அவரிடம் வன்னியிலே வைத்து வாக்குமூலம் எடுக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றது. கட்சி வேறுபாடுகள், இன வேறுபாடுகளுக்கு அப்பால் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களின் காட்டமான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் பணியில் இந்த சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன்.
மேலும், எனது இலட்சியமாக, கனவாகவும் இருந்த இந்த மாநகர சபை உறுப்பினர் என்ற பதவியை அடைந்து விட, என்னோடு எந்த நேரத்திலும் ஒத்துழைத்த உடன்பிறவா சகோதரர்கள், உடன்பிறப்புக்கள், நண்பர்கள், உறவினர்கள், எந்த விதமான எதிர்பார்ப்புக்களும் இன்றி எனக்கு வாக்களித்த மருதமுனை ஐந்தாம் வட்டார வாக்காளப் பெருமக்கள், மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு தலைவர், உறுப்பினர்கள், கட்சியின் கௌரவ செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார் அவர்கள், கௌரவ தவிசாளர் அமீர் அலி அவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பதவியில் அமர்த்தி, சத்தியபிரமாணம் செய்து அலங்கரித்த கௌரவ தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், கௌரவ மேயர் அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்து விடைபெற நினைக்கின்றேன். எமது பிராந்தியத்திலுள்ள கல்விச் சமூகத்தின் தாகத்தை தணிக்கும் வண்ணம், கொரோனாவில் முடங்கிக் கிடக்கும் வாசிகசாலையில் உள்ள பத்திரிகை வழங்கும் பகுதியில், அன்றாடம் பத்திரிகைகளை வழங்கி, வாசிகசாலைகளை வினைத்திறன் உள்ளதாக ஆக்கவும், உயிரோட்டம் உள்ளதாக மாற்றவும் ஆவண செய்ய வேண்டுமென கேட்டு விடை பெறுகிறேன்.
நன்றி.
வஸ்ஸலாம்.