Breaking
Sat. Jan 11th, 2025

மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம், ஜனாதிபதியை மாற்றி விடலாம் என்ற போலியான பிரசாரத்தை முன்னெடுத்து மக்களிடம் ஒரு மாயையை விதைத்து வாக்குகளை கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற தந்திரத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மாளிகாவத்தை ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் நேற்று மாலை(16) இடம்பெற்ற கட்சியின்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது,

 காலாகாலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து வாக்களித்து உங்கள் கைவிரல்;கள் தேய்ந்ததேயொழிய உங்கள் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. நீங்கள் இன்னும் சேரிப்புறங்களிலும் சகதிப்பிரதேசங்களிலுமே வாழ்க்கை நடத்துகின்றீர்கள். உங்கள் பிள்ளையின் கல்வியில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

மிகவும் மோசமான நிலையில் வாழும் உங்களை ஏமாற்றி ஏமாற்றி வாக்குளை பறிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் காலங்களில் மட்டும் வந்து முச்சந்திகளில் வீரவசனங்களை பேசி உங்களை உணர்ச்சியூட்டி செல்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலவீனமான கட்சியாக மாறிவிட்டது. பல்வேறு கூறுகளாக போயுள்ள இந்தக் கட்சிக்கு உயிர்கொடுக்க இங்குள்ள ஒரு சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.

ஆனால் கிரான்ட்பாஸிலும் மாளிகாவத்தையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடாவடித்தனங்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டு எமது மக்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறும் துரதிஷ்டநிலை வந்தபோது எம்மைத்தவிர எந்தவொரு கட்சிக்காரரும் இங்கு எட்டிப்பார்க்கவில்லை. இது உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்.

 கொழும்பிலே இந்த மக்களின் பிரச்சினைகளை சரியாக பேசி, சரியாக கேட்டறிந்து, முறையாக தீர்த்துவைக்க எந்த தலைமையும் முன்வராத நிலையிலேயே சகோதர வாஞ்சையுடன் இரவோடிரவாக அந்ந பிரதேசங்களுக்கு நாம் ஓடோடிவந்தோம். பிரச்சினைகளை தட்டிக்கேட்டோம். மக்களோடு மக்களாக நின்று காடையர்களை எதிர்த்தோம். நாம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எமது உயிரை பணயம் வைக்க வரவில்லை. ஆனால் மன்னாரில் அரசியல் செய்யும் உங்களுக்கு கொழும்பில் என்ன வேலை என்றுகேள்வி எழுந்தபோதுதான் நாமும் சிந்திக்க தொடங்கினோம்.

அந்த நடுநிசி வேளையில் எம்முடன் இணைந்து காடையர்களை எதிர்த்த இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூகப்பற்றுள்ளவர்கள் எங்களுக்கும் கொழும்பிலே ஓர் அரசியல் பலம் கிடைத்;தால் எவரும் வீணான கதைகளை கதைக்க இடமில்லை என்பதை உணர்த்தியதனால்தான் இத்தேர்தலில் நாமும் குதித்தோம். ஒரு மாதத்திற்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு கொழும்பில் ஓர் அங்கத்தவர்கூட இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் நாட்டத்தினால் நாம் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களையும், அங்கத்தினர்களையும் பெற்றிருக்கின்றோம்.

எமது கட்சி ஆரம்பித்து ஐந்து வருடங்களில் பல இலட்சக்கணக்கான ஆதரவாளர்களை நாடு முழுதும் கொண்டிருக்கின்றது. ஒன்றில் ஆரம்பித்த இந்த கட்சி இன்று ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரையும் ஒரு பிரதியமைச்சரையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் உள்ள10ராட்சி சபைகளில் சுமார் 61 உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றது. நாங்கள் பாராளுமன்றத்தில் பலமான சக்தியாக விளங்கிவருகின்றோம்.

இந்த அரசாங்கத்தில் பல்வேறு கட்சிகள் பங்காளிக்கட்சியாக இருக்கின்றன. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக இறைவனின் நாட்டத்தால் நாமே பல்வேறு சபைகளிலும் அதிக பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கின்றோம். கொழும்பு மக்கள் தன்மானத்துடனும் கௌரவத்துடனும் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த பிரச்சினைகளை தீர்க்க எவரும் முன்வராத நிலையில் நாம் உங்களை நாடி வந்திருக்கின்றோம். மனிதாபிமானத்தோடு மக்களின் தேவைகளை அறிந்து மக்களின் உணர்வுகளை தெரிந்து இந்த மக்களுக்கு பணியாற்றவருகின்றபோது எங்களை நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று ஏளனமாக கேட்கும்.

 நிலையை இல்லாமல் செய்வதற்காகவே நாம் களத்தில் குதித்துள்ளோம். எமக்கென்று ஓர் அரசியல் பலம் கிடைத்தால் எம்மை யாரும் பரிகாசம் பண்ணமுடியாது. கொழும்பிலே எமக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதால் எனது அமைச்சர் பதவியில் உயர்வு கிடைக்கப்போவதில்லை, எனது வசதிவாய்ப்புக்கள் பெருகப்போவதில்லை. எங்கள் கட்சிக்காரரை தெரிவுசெய்தால் நீங்கள்தான் பயனடைவீர்கள்.

நாம் யாருடைய ஏஜண்டாகவும் வரவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் எமது சமூக உரிமையை நாம் விட்டுக்கொடுக்கப்போவதுமில்லை. நாம் உயிரினும் மேலாக கருதும் எமது புனித இல்லமான பள்ளிவாசலை தாக்க வரும்போது நாம் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் வடக்கிலே பல்வேறு துன்பதுயரங்களை சந்தித்தவர்கள். நாம் சலசலப்புக்கு அஞ்சப்போவதில்லை. கோழைகளாகவும் வாழப்போவதில்லை.

பேசவேண்டிய இடத்தில் விட்டுக்கொடுக்காமல் பேசுவோம். பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்போம். காத்திரமான தீர்வை பெற்றுக்கொடுப்போம். அறிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை தட்டியெழுப்பி பிரச்சினைகளை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சியல்ல நாம். இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்களில் நாம் முக்கியமானவர்கள். காலத்துக்கு காலம் வெளியில் செல்வதும் உள்ளே வருவதுமான அரசியல் கலாச்சாரம் எம்மிடத்தில் இல்லை. அரசாங்கத்துடன் நாம் இருந்தபோதும் எமது தனித்துவத்தை நாம் ஒருபோதும் இழக்கமாட்டோம் என இந்த சந்தர்ப்பத்தில் உறுதிகூறுகிறேன். இவ்வாறு அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்.

a1 a3

Related Post