கூட்டு எதிரணி என்ற நாமத்தில் நாட்டை கூட்டாக அழித்தொழிக்கும் கும்பலில் இருந்து ஒரு குழுவினர் விரைவில் அரசாங்கத்தில் இணையவுள்ளனர். புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஏற்கனவே எமது கைவசம் உள்ளது.
எனினும் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே எம்முடன் கூட்டு எதிரணியினர் இணையவிருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முழுமையாக எதிர்த்து வரும் கூட்டு எதிரணியினர் எமது ஆட்சி காலைவாரும் நாளை கணக்கிட்டு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை திஸ்ஸமகராம பிரதேசத்தில் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,
அம்பாந்தோட்டையில் வாழும் அப்பாவி பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதியுற்றனர். இதன்போது கணக்கெடுப்பார் எவரும் இருக்கவில்லை. இது தொடர்பில் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். திஸ்ஸமகராம மக்கள் அருந்தும் குடிநீரை அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் போத்தலில் கொண்டு சென்று காண்பித்தேன். இதன்பின்னரே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது. முன்னைய ஆட்சியாளர் இது குறித்து ஒரு தடவையேனும் சிந்திக்கவில்லை.
இத்தகைய நிலையில் அப்பாவி மக்களின் பிரச்சினைகளை கண்டறியாது நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பாரிய எதிர்ப்பினை கூட்டு எதிரணியினர் முன்வைத்த வண்ணமுள்ளனர்.
கூட்டு எதிரணி என்ற நாமத்தை கொண்டிருப்பவர்கள் நாட்டை கூட்டாக அழிப்பதற்கே சதி செய்து வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் காலைவாரும். நாளை கூட்டு எதிரணியினர் கணக்கிட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் கூட்டு எதிரணியினரின் செயற்பாடுகள் ஒருபுறமிருக்கையில் , எதிரணியின் ஒரு குழுவினர் விரைவில் அரசாங்கத்தில் இணையவுள்ளனர். புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்குடன் , அரசாங்கம் எதிரணியினரை பதவிகள் வழங்கி பலவந்தமாக இணைத்து கொள்வதாக குற்றம்சுமத்துகின்றனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஏற்கனவே அரசாங்கத்தின் கைவசம் உள்ளது. எனினும் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே எம்முடன் கூட்டு எதிரணியினர் இணையவுள்ளனர்.
இதன்போது அபிவிருத்தி சார்ந்த பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பூரண ஒத்துழைப்பினை எதிரணியிலிருந்து வரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர் என்றார்.