சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்ளக அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் எமது அரசாங்கம் இன்று மிகச்சரியான பாதையில் பயணித்து வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். மஹிந்தவிடம் இருந்து நாட்டை மீட்டபோதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் எமது நாடு மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் நாம் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டோம் என்பதை நன்றாக அறியக்கூடியதாக இருந்தது. இதில் உள்நாட்டில் மனித உரிமை மீறல்கள் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் என பல பிரச்சினைகள் காணப்பட்டதோடு இலங்கையில் நடைபெற்ற யுத்த செயற்பாடுகளின் போது பொதுமக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதென சர்வதேசமும் அழுத்தம் கொடுத்து வந்தது.
அவ்வாறான நிலையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றத்துடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் சில பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படாவிட்டாலும் அவையும் வெகு விரைவில் தீர்க்கப்படும். நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்று மலர்ந்துள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் சர்வதேசமும் எமக்கு எதிராக செயற்படுவதையும் நிறுத்திக்கொண்டுள்ளது.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வு காண நாம் தயாராக உள்ளோம். உள்ளகப் பொறிமுறைகள் மற்றும் எமது நீதி செயற்பாடுகளுக்கும் முக்கியம் கொடுக்கும் வகையில் நாம் செயற்பட ஆரம்பித்துள்ளோம். அதேபோல் சர்வதேச உதவிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகவே உள்ளோம். இதுவே எமது வெற்றியாகும்.
இன்று நாம் மிகச்சரியான பாதையில் பயணிக்கின்றோம். அரசியல் பிரச்சினைகளை மற்றும் சர்வதேச அழுத்தங்களை சமாளித்து நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்து வருகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் அனைத்து செயற்பாடுகளையும் சரியாக முன்னெடுத்து செல்கின்றோம்.
மேலும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது. தமிழர் தரப்பு மற்றும் அரசாங்கம் தொடர்ச்சியாக நல்ல புரிந்துணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் இன்று வடக்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அதேபோல் சிங்கள
தமிழ் புரிந்துணர்வையும் பலப்படுத்தியுள் ளோம்.
கடந்த காலத்தில் இருந்த இனவாத அடக்குமுறைகள் எவையும் இன்று இல்லை.மூவின மக்களின் மத இன உரிமைகளை பலப்படுத்தி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்
தியுள்ளோம். ஆகவே அந்த ஒற்றுமைச் செயற்பாடே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பிரதான அம்சமாக உள்ளது.
மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படுமாயின் அரசியல் தீர்வையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான அனைத்து சாத் தியப்பாடுகளும் இப்போது ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.