அரசாங்கம், நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனின் இலங்கை வருகை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி,
ஜனாதிபதியும் பிரதமரும் அவரிடம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட யோசனை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் முன்னிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
இந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றி கொண்டமை இங்கு முக்கியமானது.
2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்ட விதம் போலவே ஐக்கிய தேசியக்கட்சி இலங்கைக்கு எதிராக யோசனை தொடர்பிலும் நடந்து கொண்டுள்ளது.
யோசனை நிறைவேற்றப்படும் முன்னர் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தார். எனினும் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தியதுடன் அமெரிக்கா தயாரித்த அந்த யோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டது.
அமெரிக்காவின் யோசனையில் எந்த மாற்றங்களை செய்யாது ஏற்றுக்கொண்ட அரசாங்கம், இது இலங்கை பெற்ற மிகப் பெரிய ராஜதந்திர வெற்றியென மக்கள் முன்னால் காண்பிக்க முயற்சித்தாலும் எனினும் இது 1815 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட மேல் நாட்டு ஒப்பந்தத்திற்கு ஈடான நாட்டை காட்டிக்கொடுத்த நடவடிக்கையாகும்.
அரசாங்கம் ஜெனிவா யோசனை மூலம் செயற்படுத்தப்பட இணங்கியிருக்கும் விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டலை செய்ய வேண்டும்.
தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் வடக்கில் அரசாங்கம் வேண்டும் என்றே உணவு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இந்த பக்கசார்பான அறிக்கையை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
யோசனையின் அடிப்படையில் விசாரணைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதி பெற அனுமதியை வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளது.