Breaking
Fri. Nov 22nd, 2024

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க வகையிலான பொறிமுறையொன்றை முன்வைத்தல், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படுவார். நாளையதினம் கூடவிருக்கும் முதலாவது அமர்வில் ஏழு உப தலைவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். சபாநாயகர் சமூகமளிக்காத அமர்வுகளில் அவர்கள் தலைமை தாங்குவார்கள். முதலாவது அமர்வில் வழிகாட்டும் குழுவொன்று அமைக்கப்பட்டு, புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிக்கும் பொறுப்பு அக்குழுவுக்கு வழங்கப்படும். இக்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட 17 பேரைக் கொண்டதாக இருக்கும்.

இதன் தலைவராக பிரதமர் செயற்படுவார். இதற்கு மேலதிகமாக இந்த வழிகாட்டல் குழு தேவைக்கு ஏற்ற வகையில் உப குழுக்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு உப குழுவும் 11 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும். அரசியலமைப்பு சபை கூடுவதற்கான ஆகக்குறைந்த உறுப்புனர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.

நன்றி – தினகரன்

By

Related Post