Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முசலியில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டமானது, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனே வழங்கப்படுகின்றன என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் தெரிவித்தார்.

முசலியில் அமைக்கப்படவுள்ள 7௦௦ வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னார், முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

‘’முசலியிலே நடைபெறுகின்ற இந்த வைபவத்தினை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே கருதுகின்றேன். இந்த 700 வீட்டுத்திட்டம் எவ்வாறு வந்தது? எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? யார் கொண்டு வந்தது? யார் மூலமாக இது கிடைக்கப்பெற்றது? என்பதெல்லாம் நிச்சயமாகவே உங்களுக்கு நன்கு தெரியும்.

முசலிப் பிரதேசத்திலே இது வரை 8343 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தப் பதிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அத்தனை பேருக்கும், வீடற்ற அத்தனை குடும்பங்களுக்கும் வீடுகளை கொடுக்க வேண்டுமென்பது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் எண்ணம்.

இன்று வழங்கப்படுகின்ற 700 வீடுகளோடு சேர்த்து 4743  வீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த 4743 வீடுகளையும் பெறுவதற்காக வீடுகளை கட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அரசிடமும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் எத்தனை பாடுபட்டிருப்பார் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த வீட்டுத் திட்டங்களை கொண்டு வருகின்ற போது, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடன் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென்பதுதான் விதிமுறை.

அந்தக் கட்சியென்றோ இந்தக் கட்சியென்றோ அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றோ, இவர்களுடைய ஆதரவாளர்கள் என்றோ நாங்கள் பிரித்துப் பாகுபடுத்திப் பார்க்காமல் சேவையாற்றி வருகின்றோம்.

வீடற்றவர்களுக்கும், இங்கு நிரந்தரமாக வசிக்கின்றவர்களுக்கும், நிரந்தமாக வசித்து வீடில்லாதவர்களுக்கும், குடும்பத்தோடு வாழ்கின்றவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டுமென்ற அமைச்சர் அவர்களுடைய திட்டத்தின் கீழ்தான், இந்த வீடுகள் வழங்கப்படுகின்றது .

நாங்கள் சொல்வதை எல்லாம் செய்து காட்டுகின்ற ஒரு அமைச்சருக்கு கீழிருந்துதான் பணியாற்றுகின்றோம். அமைச்சர் ரிஷாட் செய்வதைத்தான் சொல்வார். சொல்வதைத்தான் செய்வார். தேசிய மீலாத் விழாவிற்கு மிகக் குறைந்த நாட்களே இருப்பதனால், அதற்கு முன்னதாகவே அவர் வீட்டுத் திட்டத்திற்க்கான நிதியினை வழங்கி, இந்த வரலாற்று நிகழ்விலே முழுமையான ஈடுபாட்டினை செலுத்திக் கொண்டிருகின்றார்.

இந்த முசலி பிரதேசத்தைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். அருவி ஆற்றிலிருந்து உப்பாறு வரைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் 28 குக்கிராமங்கள் இருக்கின்றன. 20 கிராம சேவையாளர்கள் பிரிவு இருக்கின்றன. 8500 மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பாதை, கல்வி, விவசாய நடவடிக்கை, மின்சாரம் இன்னும் எத்தனையோ விடயங்கள் அத்தனையையும் அன்று தொடக்கம் (2௦௦6)  இன்று வரைக்கும் கவனித்து வருகின்ற, ஒரு சிறந்த அரசியல் தலைவனாகவே இன்று  அமைச்சர் ரிசாட்டை மக்கள் பார்க்கின்றார்கள்.

எனவே, மிகத்திறமையான அரசியல் சாணக்கியத்தை கொண்ட அமைச்சர் ரிஷாட், இந்தப் பிரதேசத்து மக்களுக்கு எப்படியாவது வீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று பாடாய்ப் படுகின்ற சிறந்த தலைவனாகவே இருக்கின்றார். அந்த நல்ல  மனிதன்தான் கட்டங்கட்டமாக வீடுகளை கொண்டு வந்திருக்கின்றார். 47௦௦ வீடுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இன்னும் அந்த வீட்டுத் திட்டம் தொடர்ந்தும் எங்களுடைய எட்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கும், மக்களுக்கும் நிச்சயமாக இந்த முசலிப் பிரதேசத்தில் கிடைக்கும்.

முற்றாக காடு படர்ந்து காட்சியளித்த முசலிப் பிரதேசத்தில் காடு படர்ந்த பகுதிகளை அழித்து கல்வியிலே ஒரு மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தித் தந்த ஒரு மகனாகவே நாங்கள் அமைச்சரைப் பார்க்கின்றோம். முசலிப் பிரதேசத்தில் இன்று 18 முஸ்லிம் பாடசாலைகளும், 7 தமிழ் பாடசாலைகளும் மொத்தமாக 25 பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த 25 பாடசாலைகளுக்குரிய கட்டிடங்கள், தளபாடங்கள், ஆசிரிய வளங்கள், ஏனைய அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தந்தவர். முசலியில் ஒரு தேசியப் பாடசாலையினையும், ஐந்து மஹா வித்தியாலயத்தினையும் நாம் யார் மூலம் பெற்றோம் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அத்தோடு, முருங்கனில் இருந்து முள்ளிக்குளம் வரைக்கும் காபட் வீதிகளில் இன்று நாங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். முருங்கனில் இருந்து முள்ளிக்குளம் வரையிலும் அனைத்து வீடுகளிலும் மின்சாரம், இதனோடு நின்று விடாமல் மறிச்சுக்கட்டி தொடக்கம் வியாயடிக்குளம்  வரையுள்ள   இரண்டு தோட்டங்களையும்,  45 சிறிய குளங்களையும் புனரமைத்து, விவசாயக் காணிகளையும் சீர்செய்து இன்று நாங்கள் இரண்டு போகங்கள் விவசாயம் செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தந்தவர். படித்த இளைஞர், யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட் என்பதை எவரும் மறக்கப் போவதில்லை.

இவ்வாறான அளப்பரிய சாதனைகளை எங்களுடைய அமைச்சர் அவர்கள் முசலிப் பிரதேசத்திற்கு மனமுவந்து செய்து தந்திருக்கின்றார். இந்த அமைச்சரைப் போன்று ஏனைய அமைச்சர்களும் செய்வதற்கு முனையலாம். அதற்கு மாற்றமாக ஒரு நல்ல அமைச்சரை குறை கூறுவதும், பணிகளை கொச்சைப்படுத்துவதும் ஒரு கேவலமான செயலாகவே அமைகிறது.

ஒரு அருமையான பழமொழியுண்டு. காய்த்த மரம்தான் கல்லெறி படும். காய்க்காத மரம் கல்லெறி படாது. எனவே, நன்றாக காய்க்கின்ற ஒரு மரமாகத்தான் நாங்கள் எங்கள் அமைச்சர் ரிசாட்டை பார்க்கின்றோம். அதனால்தான் அவருக்கு அவ்வளவு விமர்சனம். உதவி புரிகின்றவர்களுக்குத்தான் விமர்சனங்கள் வரும். அத்தனையையும் தாங்கிக்கொண்டு இன்று எம் மக்களுக்காய் துணிச்சலுடன் சேவை செய்து கொண்டிருக்கின்றார்” என்றார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முகுசீன் ரயிசுத்தீன், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர், தேசிய இளைஞர்  சேவைகள் மன்ற வட மாகாண பணிப்பாளர் முனவ்வர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.   

-ஊடகப்பிரிவு-

 

Related Post