கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பது கட்டாயக் கடமையாகும்.
அக்கரைப்பற்றில் வாழும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தவர். மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக்கொடுத்தவர். இதுபோன்று அவரது சேவைகள் ஏராளம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறி விட்டார். அதிலொன்று தேசிய பாதுகாப்பு ஆகும். இரண்டாவது மூவின மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட்டு, இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூரியிருந்தார். ஆனால் தற்போதைய அமைச்சரைவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியைக் கூட உள்வாங்கவில்லை. இதன் மூலம், இந்த நாட்டில் நிலவி வந்த வரலாறை அவர் புறந்தள்ளியுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் புராதன இடங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில், சிறுபாண்மை இனத்தவர்களை உள்வாங்காமல் உறுப்பினர்களை நியமித்துள்ளார். இவ்வாறு ஒன்றின் பின் ஒன்றாக, ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அவர் மீது கொண்ட கடைசி நம்பிக்கையும் அற்றுப்போன துக்ககரமான நிலையே காணப்படுகின்றது” என்று கூறினார்.