சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் குறித்து தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்புகொண்டு வினவியுள்ளார். இதன்போதே இன்று முதல் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது கைதிகளில் 32பேரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிப்பது என்றும் ஏனைய 30 பேரை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனைவிட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் விசேட அமைச்சரவை உபகுழுவை நியமித்து நடவடிக்கைகளை எடுப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் கடந்த திங்கட்கிழமை 32 அரசியல்கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் கவலை அடைந்தனர். இந்த நிலையிலேயே இன்று முதல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளில் முதற்கட்டமாக 31பேரை பிணை வழங்கி விடுதலை செய்வதற்கான செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வு பெறுவதற்காக முகாம்களுக்குச் செல்லத் தயாராக இருப்பவர்கள் தமது விருப்பம் தொடர்பில் சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள் ஊடாக எமக்கு அறிவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தமது சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள்இ கைதிகள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்தவண்ணமுள்ளனர். அவர்கள் அமைதியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலை பிரிவினர் விசேட கவனமெடுத்துள்ளனர். பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதற்குரிய பூரண ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெலிக்கடையில் 93பேரும்இ போகம்பரையில் 12பேரும்இ மட்டக்களப்பில் 10பேரும் அநுராதபுரத்தில் 29பேருமாக 144பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத்தும் நானும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தோம். உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம்.
இந்நிலையில் நாளை முதல் (இன்று) முதல் முதற்கட்டமாக 31பேருக்கு பிணை வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏனைய 32பேருக்கான விடுதலை தொடர்பில் நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் எடுக்கவுள்ளது.
அதேநேரம் 48பேர் தண்டனையளிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 116பேர் மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 10பேர் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மேன்முறையீடுகளை செய்துள்ளவர்களாகவும் உள்ளனர். இவர்களை தவிர ஏனையோரை எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பாக அவர்களின் கோப்புக்கள் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வு பெறுவதற்கு விரும்புவோர் தமது விபரங்களை சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள் ஊடாக எமக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர் என்றார்.