Breaking
Thu. Nov 14th, 2024

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது.

வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியான சோசலிஷ இளைஞர் ஒன்றியத்தின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையூடாகவே, இந்தக் கோரிக்கைகளை ஜே.வி.பி விடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கம், பாலின பாகுபாட்டின் நிறுத்தம், இளைஞரின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நோக்கிய சமூக சீர்திருத்தங்கள் பலவற்றை, தமது இளைஞரணியூடாக ஜே.வி.பி கோரியுள்ளது.

அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலை, இன – மத அடிப்படையில் காணப்படும் பாகுபாட்டைத் தடை செய்தல், உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை உருவாக்குதல், பாகுபாட்டுக்கெதிரான தேசிய ஆணைக்குழுவொன்றை உருவாக்குதல், சமய, இன அடிப்படையில் பாடசாலைகளை உருவாக்குதலைத் தடை செய்தல் ஆகியவற்றுக்கு, இந்தக் கொள்கை கோரிக்கை விடுத்துள்ளது.

சீதனம் உள்ளிட்டதாக, திருமண வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் பாகுபாட்டை ஒழிக்குமாறு, இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர, பாலின அடிப்படையிலான பாடசாலை விடுத்து, கலவன் பாடசாலைகளை உருவாக்குதல், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக உறுதி செய்தல், இளைஞர் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் மூன்றிலிரண்டு பங்காக பெண்களின் பிரதிநிதித்துவம், குழந்தை பிறப்பைப் பொறுத்தவரையில் முடிவெடுக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல் ஆகியவற்றுக்கும், ஜே.வி.பி அழைப்பு விடுத்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, வாக்களிக்கும் குறைந்தபட்ச வயதை, 18இலிருந்து 16க்குத் தாழ்த்துமாறும், இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மேம்பாட்டைப் பொறுத்தவரை, இளைஞர் அபிவிருத்தி வங்கியொன்று உருவாக்கப்பட வேண்டுமென, ஜே.வி.பி கோரியுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவரான அநுர குமார திஸாநாயக்க எம்.பி., பொருளாதாரத்திலும் சமூகத்திலும் அதிரடியான மாற்றங்களுக்காகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நேரம் வந்துள்ளதாகவும், இந்தச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு, இளைஞர்களுக்கு விசேட பொறுப்புக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, சோசலிஷத்தை நோக்கி விரைவாகச் சென்றுகொண்டிருக்கும் நாடாக இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் முன்னணி அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் கார்லோ பொன்சேகா, முன்னணிப் பாடகர் சுனில் பெரேரா, சிரியா, பலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கியூபா ஆகியவற்றிலிருந்து முன்னணி இராஜதந்திரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post