வன்னி மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்தவொரு அரச அதிகாரியும் ஈடுபடுத்தப் படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன், அவ்வாறான ஒரு கருத்தை எந்தவொரு அரச அதிகாரியும் கூறவும் மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது.
வடமாகாண சபைத் தேர்தலின் போது அரசு வடக்கு ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் றிசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
முதலமைச்சர் விக்னேஸ்வரன் இங்கு 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
அவரின் எந்தவொரு கருத்துக்கும் பதிலளிப்பதென்றால் எனக்கும் 20 நிமிடங்கள் தேவைப்படும். ஆனால், அதற்குரிய கூட்டமல்ல இது. இந்தக் கூட்டம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம். மக்கள் நலன் தொடர்பாக அவர்களினதும் இந்த மாவட்டத்தினதும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்.
30 வருட யுத்த சூழலுக்கு பின்னர் இன்று இந்த மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளை கண்டு வருகின்றது. கடந்த 5 வருடங்களில் ஜனாதிபதியின் விசேட பணிப்பின் கீழ் அமைச்சர் பசிலின் விசேட நிதி ஒதுக்கீட்டினால் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு ஆளுநர் பூரணமாக ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான், கரைந்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழுத் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார். இது குறித்தும் முதல மைச்சர் தனது ஐயப்பாட்டை வெளிப்படுத்தினார்.
நான் நியமனம் பெற்ற நாள் முதல் இன்று வரை மிகவும் நேர்மையாக செயற்பட்டு வந்துள்ளேன் என்பதற்கு கூட்டமைப்பு எம்.பிக்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் பொதுமக்களும் தக்க சாட்சிகளாக உள்ளனர் என்பதை முதலமைச்சருக்கு எத்திவைக்க விரும்புகிறேன்.
திருட்டுத் தனமாக எந்தவொரு முடிவையும் நாங்கள் அக்கூட்டங்களில் எடுத்தது கிடையாது. மக்களின் பிரச்சி னைகள் பலவற்றுக்கு அதன் போது தீர்வுகளை பெற்றுக் கொடுத் துள்ளோம்.
எனக்குத் தெரியப்படுத்தாமல் மக்களு க்காக செய்த நல்ல பணிகளை அரச அதிபர் பின்னர் எனக்கு தெரியப்படுத்திய போதும் கூட அதற்கு நான் மனமுவந்து அனுமதி வழங்கியிருக்கிறேன் என்ப தையும் முதலமைச்சருக்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன் என்றும் அமைச்சர் தனது உரையின் போது குறிப் பிட்டார்.