Breaking
Mon. Dec 23rd, 2024

அரச ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

2500 கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்காக நேற்று (07) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தரும் தனது கடமை தொடர்பில் நேர்மையாக பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகாலம் கிராம உத்தியோகத்தராக பணிபுரிந்து பல அனுபவங்களைப் பெற்ற ஒருவரென்ற வகையில் கிராம உத்தியோகத்தர் பதவி தொடர்பில் தனது உள்ளத்தில் மிகுந்த கௌரவம் உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராம அலுவலர்களுக்கு சமூகத்தில் உரிய கௌரவம் வழங்கி கிராமிய தலைமைத்துவத்தில் முக்கிய சமூக காரணியாக அவர்களை மாற்றுவதற்கு இன்று இந்நியமனம் வழங்கப்படுகிறதெனக் குறிப்பிட்டார்.

கிராம அலுவலர்களுக்காக அரசு என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் கடமை இத்துடன் முடிவடைவதில்லை என்பதுடன், அவர்களுக்கான வசதிகள், கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் விசேட தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதிக்கு இதன்போது விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குமாறு பொலன்னறுவையில் இடம்பெற்ற கிராம அலுவலர் சம்மேளனத்தின் போது ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரமன்றி முழு இலங்கையிலும் உள்ள கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் அடையாள நிகழ்வாக கிராம அலுவலர்கள் சிலருக்கு ஜனாதிபதியினால் சமாதான நீதிவான் நியமனம் வழங்கப்பட்டது.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

By

Related Post