சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை
தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும்.
வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான அறிக்கைகளை விடுத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்தி வரும் சிவசக்தி ஆனந்தன் போன்ற தமிழ்க்கூட்டமைப்பில் உள்ள ஒருசிலர் தொடர்ந்தும் வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இது மிகவும் வேதனைதரும் விடயமாகும்.
எந்த ஒரு தமிழ் மகனுக்கும் அநியாயம் செய்து அரசியல் நடத்த அமைச்சர் றிஷாட் விரும்பியதில்லை. அவ்வாறு ஒருபோதும் செய்யவும் மாட்டார்.
வீரவசனங்களாலும் உணர்ச்சிகரமான பேச்சுக்களாலும் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி அரசியல் செய்து வரும் இவர்கள் மக்களின் நலனுக்காக இதுவரை செய்தது என்ன.
யுத்தத்தால் பாதிப்புற்ற மெனிக் பாம் மக்களை அமைச்சர் றிஷாத் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் கௌரவமாக குடியமர்த்தினார். இவ்வாறு கஷ்டப்பட்டு பணிசெய்த அமைச்சர் றிஷாட்டை ஏன் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றார்கள் என்றார்.