இக்பால் அலி
“வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது, அரசியல், மற்றும் கொள்கைரீதியில் பல் வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது, குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது.
இதில் உங்களை போன்ற சிவில் சமூக அமைப்புகள் அவதானம் செலுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பேணப் படுவதற்கான ஆலோசனைகள் விதந்துரைப்புகளை இப்போதிருந்தே கலந்துரையாடப் பட்டு அதை எழுத்து மூலம் ஆவணப் படுத்தி எம்மிடம் சமர்பிக்க ஏற்பாடுகளை செய்வீர்களாயின் இவற்றை உள்வாங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பேன், ” என்று கைத்தொழில் பொருளாதார அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் தெரிவித்தார்கள்.
மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம், கடந்த வரலாற்று புகழ் மிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக களமிறங்கி பாடுபட்ட முஸ்லிம் சிறும்பான்மை கட்சி தலைமைகளை ஒன்று கூட்டி ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது, மேற்படி கருத்தை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள் “ நாம் இந்த நிகழ்வை மூன்று அடிப்படை நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்தோம். முதலாவது நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் தலைவர்களான உங்களின் பங்களிப்பு வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்காக மட்டுமன்றி இந்த நாட்டிற்கும் செய்த வரலாற்று புகழ் மிக்க சேவையாகும் . குடும்ப ஆட்சியின் அதிகார வெறி, கொள்ளை, கொலை, நாட்டின் வளங்களை சூரையாடியமை, இனவாதம் ஆகியவற்றிற்கு எதிரான மிகப் போராட்டம் ஒன்றையே காலத்தின் தேவையுணர்ந்து செய்தீர்கள். ஆகவே உங்களை பாராட்டி பாராட்டு மடல் ஒன்றை கையளிக்க நாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.
இந்த சபையில் உங்களை இவ்வாறு நன்றி பாராட்டுவதில் மலையக முஸ்லிம் கவுன்சில் மனமகிழ்கின்றது………..
“ஆட்சியை அளிப்பவனும்
ஆட்சியை பறிப்பவனும் அல்லாஹ்,!
அவனன்றி அணுவும் அசையாது”,
என்ற ஈமானிய நெஞ்சத்தவர் நாம் .!
நம் நாட்டின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல்
ஒரு திருப்பு முனையாக அமைவதற்கு,
எல்லாம் வல்ல அல்லாஹ் காட்டிய வழி நின்று,
சிறும்பான்மை முஸ்லிம்களின்
இருப்பை உறுதிபடுத்த,
“அநியாயக்கார அரசனின் முன்
உண்மையை உரக்கச் சொல்வதே பெரிய ஜிஹாத்”
என்று சொல்லித் தந்த நபிகள் (ஸல்) கோமானின் சொற்படி
ஊழல் , மோசடி, துஷ்பிரயோகம், துவேஷம்
ஆகிய களைகளிலிருந்து,
நாட்டையும் மக்களையும் காப்பதற்கு
“ மைத்ரி ” ஆட்சியில் இணைய,
உங்களை ஏவிய அல்லாஹ் மிகத் தூயவன்.
முஸ்லிம்களும் இந் நாட்டின் முதுசங்கள் தான்,
என்று முகவரியோடு கோடிட்டுக் காட்டி,
சிங்கள மக்களோடு அமைதியாகவும் ஐக்கியமாகவும்,
“ இலங்கையர் நாம் ” என்று வாழும் ஒரு சூழலை
உருவாக்க உறுதிகொண்டு, ஒருமுகமாய்ச் செயற்பட,
உங்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும்
தந்துவிட வல்ல அல்லாஹ்வை வேண்டி,
உங்களை மனதார வாழ்த்துகின்றோம்.
“ உண்மையிலும், உத்தமமான காரியங்களிலும்
மேன்மை பெறுவதற்கு எப்பொழுதும்
நீங்கள் பாடுபடுங்கள்” – சஹிஹ் புஹாரி
எமது இந்த நிகழ்வின் இரண்டாவது நோக்கம் அடுத்து நடக்க விருக்கும் யாப்பு மாற்றங்கள் குறித்து எமது சமூகத் தலைமைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடு குறித்ததாகும். தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கிய பங்காளிகளாக பல்வேறுபட்ட அரசியல், சமூக கொள்கைகளையுடைய கட்சிகளும் தனிநபர் ஆளுமைகளும் அங்கம் வகிக்கின்றனர். குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய தற்போதைய அரசியல் நிலவரங்களுகேட்ப சுமுகமான போக்கை கடைபிடித்தாலும் கொள்கையளவில் முஸ்லிம்கள் விடயத்தில் பல முரணான கருத்துக்களை கொண்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிந்து வைத்துள்ளோம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள், “ கிழக்கில் நசிரிஸ்தான் என்றொரு முஸ்லிம் ராச்சியத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தநாட்டின் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் செயற்படுகின்றன.
அஷ்ரப்பின் பின் ரவுப் ஹகீம் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்று தாம் அமைச்சராக இருக்கும் போதே “ அல் ஜிஹாத். அல் கைதா”, “கிழக்காசியாவின் தீப் பந்தம்” போன்ற நூல்களில் கருத்து எழுதி வெளியிட்டவர். ஆகவே இந்த ஆட்சி மாற்றநிகழ்ச்சி நிரலின் கதாநாயகனாக இருக்கும் அவர் கொள்கை அளவில் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை குறைக்கவும். முஸ்லிம்களின் கலாசார சமய விடயங்களில் சட்ட திருத்தங்களை கொண்டுவரவும் எண்ணம் கொண்டவர் . ஆகையால் நடந்து முடிந்த தேர்தல் போராட்டத்தை விட பல மடங்கு முக்கியத்துவமளித்து ஒற்றுமையாக ஓரணியில் நின்று செயற்பட வேண்டும் என்ற கவன ஈர்ப்பை பெறுவதற்காக இந் நிகழ்வை நாம் ஏற்பாடு செய்தோம்.
எமது மூன்றாவது நோக்கம் இன்று பதுளை பிரதேச முஸ்லிம்கள் ஒருவகையான வெற்றிக் களிப்பில் உள்ளார்கள். தாம் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார் ஆகவே முஸ்லிம்களும் வெற்றி பெற்று விட்டார்கள் என்ற ஒருவகையான ஏமாற்றம் கலந்த வெற்றிக் களிப்பே அது. ஆனால் எமது பார்வையில் உண்மையில் பதுளை மாவட்ட முஸ்லிம்களை பொறுத்தவரை மாகாண சபையிலோ, பாராளு மன்றத்திலோ ஒரு முஸ்லிம் பிரதி நித்திதுவத்தை பெற்றிருந்தால் மாத்திரமே அது உண்மையான வெற்றியாக அமைந்திருக்கும். விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலத்தை கருத்தில் கொண்டு கடந்த மாகாண சபை தேர்தலில் இருபெரும் முஸ்லிம் கச்சிகளை ஒன்றிணைத்து போட்டியிட்ட போதும் எமது முயற்சி கைகூடாமல் போனது எமது துரதிர்ஷ்டமே.
என்றாலும் மலர்ந்திருக்கும் மைத்ரீ ஆட்சியில் கௌரவம் மிக்க பங்காளிகளான இரு பெரும் முஸ்லிம் கட்சிகளுக்கு தற்போது பலம் மிக்க அமைச்சு பதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன, கடந்த சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக புறக்கணிப்புகளுக்கு உள்ளான பதுளை மாவட்ட முஸ்லிம்களுக்கு இந்த அமைச்சுகள் மூலம் கட்டாயம் சேவைகள் முநேடுக்கப் பட வேண்டும்.
தேர்தல் காலங்களின் போது அமைச்சர்கள் நேரில் கண்ட இப் பிரதேச மக்களின் அவலங்களை ஓரளவேனும் துடைத்திட இந்த நூறுநாள் வேலை திட்டத்தில் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட வேண்டும். சில்மியா புர மக்களின் தண்ணீர் பிரச்சினை, மற்றும் நீர் வசதியின்றி கஷ்டப் படும் எத்தனையோ பள்ளிவாசல்கள் உட்பட கம நெகும, திவி நெகும போன்ற செயற்திட்டங்களால் புறக்கணிக்கப் பட்ட முஸ்லிம் பிரதேச பாதைகள் ஒழுங்கைகள் மற்றுமுண்டான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தரக் கூடிய அமைச்சுப் பதவிகள் இன்று தாராளமாக மு கா வுக்கும், அகி இல ம காவுக்கும் கிடைத்துள்ளன. ஆகவே இவற்றின் பால் எமது தலைவர்களான உங்களின் மேலான கவனத்தில் கொள்ள வேண்டும்”. என்றும் ஏ எம் எம் முஸம்மில் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில், “ வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் சமுர்தி” பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களும். மத்திய மாகாண சபை உறுப்பினர் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் சிம்மக் குரலான அசாத் ஸாலிஹ் அவர்களும், புத்தளம் மாவட்ட முன்னால் பா ம உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவின் சார்பு ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் இல்லியாஸ், அகி இல ம காங் செயலாளர் வை எல் எஸ் ஹமீட், பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சட்டத்தரணி ருஷ்டி ஹபீப். அல் ஹிக்மா அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷைஹு செகுதீன் மதனி ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
பதுளை மாவட்ட ஜம்மியத்துல் உலமா உதவித் தலைவரும் பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரியின் அதிபரும், UCMC யின் ஆலோசகருமான அஷ்ஷைஹு ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த UCMC செயலாளர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.