அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சாதாரண மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றது. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. சுயலாபத்துக்காக அவர்கள் கோரும் சூரியனையும் சந்திரனையும் எம்மால் வழங்கமுடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சுக்கள் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிடும் நேரத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த வாரம் கல்வி அமைச்சுக் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இரவு முழுவதும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வட்டியில் உணவு மற்றும் குடிபானம் கொண்டு சென்றமைக்கான சாட்சிகள் இருக்கின்றன. இடமாற்றம் பெற்றுச்செல்லும் அரசாங்க வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்க பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்தவாரம் கல்வி அமைச்சுக்குள் நுழைந்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அன்றையதினம் நடைபெறவிருந்த பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழாவையும் நடக்கவிடாது குழப்பி இரவு முழுவதும் கல்வி அமைச்சு கட்டடத்துக்குள் தங்கியிருந்தனர்.
இவர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைப் பிரச்சினைக்காக ஏனைய மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன் தமது சொந்தத் தேவைக்கான போராட்டத்துக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியொன்றையும் கல்வி அமைச்சுக்குக் கொண்டுவந்திருந்தனர். நோயாளர்களை காவிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டியில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசாங்க வைத்திய அதிகாரிகளுக்கு உணவு மற்றும் குடிபானம் கொண்டுவரப்பட்டமைக்கு தெளிவான சாட்சிகள் உள்ளன.
இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுத்து ஊடகங்களுக்கு நாடகமாட அவர்கள் முயற்சித்தனர். கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கிய மாணவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மருத்துவ சங்கம் சவால் விடுகிறது. நாம் 1,5,6ஆம் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்கவில்லை. எமக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கவில்லை. அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படைத் தன்மையுடனேயே மேற்கொள்ளப்பட்டது.
எமக்கு எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்கவேண்டிய தேவை கிடையாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பி. க்களின் பிள்ளைகளைக் கூட மேன்முறையீட்டு சபைக்கு முன்வைத்து உகந்த பாடசாலைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள போலி ஆவணத்தின் காரணமாக நியாயமான மருத்துவர்களுக்கு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மருத்துவ சங்கம் எம்மை முட்டாளாக்கி சுவரில் சாய்த்து தங்களுடைய மோசடிகளை நியாயப்படுத்த முயல்கிறது. கடந்த ஆட்சியில் அவற்றை சாதிக்க முடிந்தாலும் எமது ஆட்சியில் அதற்கு இடமில்லை.
மருத்துவ சங்கத்தின் பாசிசவாததத்துக்கு ஜனநாயகவாதியான நான் ஒருபோதும் தலைசாய்க்கப் போவதில்லை. மருத்துவர் சங்கம் மருத்துவத்துறையின் கௌரவத்தை சீரழிக்கும் வகையில் செயற்படுகின்றது. இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. சாதாரண மாணவர்களின் உரிமைகளை மீறமுடியாது. அவர்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது என்றார்.