இரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும்.
29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில் இனிப்பு உள்ளது என்றும் கூறியும் அதனை திறந்து காட்டுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். இருந்தும் முகம் சுளிக்காமல் அவர்களுக்கு இனிப்பு பெட்டியை திறந்து காட்டி இனிப்பையும் கொஞ்சம் பகிர்ந்திருக்கிறார் கலீல்.
அவருடன் 28 வயது நிரம்பிய அவரது நண்பர் அனஸ் அய்யாதும் பயணித்திருக்கிறார். இந்த இருவரும் தங்களின் தாய் மொழியான அரபி மொழியில் பேசிக்கொள்ளவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பலஸ்தீனில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள். கலீல் அமெரிக்காவில் ஒரு பிட்சா கடை நடத்தி வருகிறார். விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு பிறகு கலீல் அங்கிருந்த பொலிசாரை அணுகி விபரத்தை கூறி உதவி கேட்டுள்ளார். “மற்றவர்களை போல நாங்களும் அமெரிக்க குடிமக்கள் தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த குழப்பத்தினால் விமானம் சிறிது தாமதிக்கப்பட்டது. இது குறித்து கலீல் கூறிகையில் தங்களின் சக பயணிகளில் பலர் தங்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் சிலருக்கு தங்களுடன் பயணிக்க கடினமாக இருந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
உலகின் எந்த ஒரு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்கள்தான் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.