– முஹம்மது மஸாஹிம் –
பற்றியெறிகிறது மியன்மார், பதறுகின்றது இதயம், பிரார்த்திக்கின்றன கைகள், இன்னும் பார்த்துக் கொண்டா இருக்கின்றான் படைத்தவன்..? எங்கே அவனை நம்பி கலிமாச் சொன்ன மக்களைக் காப்பாற்ற, இன்னும் அவன் அழிவை ஆரம்பிக்கவில்லை..? கண்ணெதிரே இவர்களுக்கு காட்டவேண்டுமல்லவா..?
இன்று அதிகமான மக்களின் உள்ளத்திலுள்ள கேள்விதான் இது.
ஆம்.. எம்மைப் படைத்த இறைவனை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். அவனது சூப்பர் படைகளுக்கு முன்னாள், உங்கள் உலக கூட்டுப்படைகள் தூசிப் படைகளே..
உங்களிடம் தரைப்படை உள்ளதா..? அவனுக்கு தரையே ஒரு படைதான் – ஒரு உலுக்கு உலுக்கினால் போதும், லட்சக்கணக்கான உயிரைக் காவெடுக்க முடிந்த நேபாலினால் – அவனின் பூகம்ப ஆட்டத்தை நிறுத்த முடிந்ததா..?
உங்களிடம் கடற்படை உள்ளதா..? அவனுக்கு கடலே ஒரு படைதான் – கொஞ்சம் குலுக்கிவிட்டால் போதும், உலகமகா தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்யும் ஜப்பானினால் – அவனின் சுனாமி பேரலையை நிறுத்த முடிந்ததா..?
உங்களிடம் ஆகாயப்படை உள்ளதா..? அவனுக்கு ஆகாயமே ஒரு படைதான் –கொஞ்சம் திறந்துவிட்டால் போதும், ஏகாதிபத்திய வல்லரசு நாங்கள்தான் என மார்தட்டும் அமெரிக்காவினால் – அவனின் மழைநீர் வெள்ளத்தை மட்டுப்படுத்த முடிந்ததா..?
அப்படியானால், அவன் ஏன் இன்னமும் இந்த அநியாயத்தைக் கண்டுகொள்ளவில்லை..? அவனே சொல்வதைக் கேளுங்கள்.
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்;அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் நாளுக்காகத்தான். ( அல்குர்ஆன்14:42)
ஆம் அவன் அழிவை ஆரம்பித்தால் எப்படி அது ஒட்டுமொத்த உலகை தூள் தூளாக்கும் அழிவாக இருக்கும் தெரியுமா..?
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)
எந்த ஊர்(வாசி)களையும் அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத் தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை. (அல்குர்ஆன் 15:4)
இங்கே பதறப் பதற குழந்தை பெண்கள் என்று பாராமல், வீட்டுடன் சேர்த்து உயிருடன் கொழுத்திவிட்டு அவர்கள் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன..? அவர்கள் சாகக்கூடாது – அதுக்கும்மேல..
அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். (அல்குர்ஆன் 89 : 25-26)
அந்நாளில் (பாரிய) சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். அவர்களுடைய ஆடைகள் (கொதிக்கும்) தார் யினால் ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன் 15 : 49-52)
ஆம் – இது நமக்கெல்லாம் ஒரு சோதனை காலம். நாம் இத்தகைய காலத்தில் எம்மை சுற்றியுள்ள மாற்றுமத மக்களிடம் நேரடியாகவோ, இணையத்தள வாயிலாகவோ, சோசியல் மீடியாக்களில், எமது கருத்துக்களை மிகவும் அவதானமாக முன்வைப்பதோடு, எமது நடவடிக்கைகளையும் அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் அமைத்துத் கொள்ள வேண்டும். ஏனெனில்,
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;
ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்‘ என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்,நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 2: 155-157)
எனவே, அல்லாஹ் இதை பார்க்கவில்லையா..? கேட்கவில்லையா என மனசு புலம்புவதையும், எப்பவுமே இரத்தத்தையும் சதையையும் காட்டி மனதை கவலையிலேயே ஆழ்த்திவிடாமல், ஆரோக்கியமாக உங்களால் இதற்கு என்ன செய்ய முடியும் என்றும் சிந்தியுங்கள்.
எங்கள் பிரார்த்தனைகளோடு மட்டும் நின்றுவிடாது – எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுதுங்கள். பேச்சாற்றல் உள்ளவர்கள் குரல் கொடுங்கள். அதிகாரத்திலுள்ளவர்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு கண்டனத்தைப் பதிவுசெய்ய அழுத்தம் கொடுங்கள்.
அதேபோல், இஸ்லாமிய விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக, அல்லாஹ் வெறுக்கக்கூடிய – கவனயீர்ப்பு தீக்குளிப்பு போன்ற முட்டாள்தனங்களில், இளைஞர்கள் உயிரை மாய்த்து மேலும் அல்லாஹ்வின் சாபத்தை அதிகரிக்க வேண்டாம்.
அதேபோல், அசின் விறாது போன்றவர்கள் மீதுள்ள வெறுப்பில், ஒட்டுமொத்த சாத்வீக வழி மத குருமார்களையும் இழிவுபடுத்தாது, தேவையற்ற அசிங்கமான தூசிக்கும் வார்த்தைகளை “கொமன்ட்“களாக பதிவு செய்வதை தவிர்த்து, இந்தப் பிரச்சனையை கையாள சக்திபெற்றவர்களின் கவனத்தை ஈர்க்கத் தேவையான ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
எங்கள் கைக்கு ஆட்சி கிடைக்கட்டும், அப்புறம் பாருங்கள் என்று சொன்ன இலங்கையின் இனவாதிகளுக்கும் – இருபத்திநான்கு மணி நேரங்களில் வெளியேற வேண்டுமென கெடு விதித்த பலஸ்தீன அடக்கு முறையாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன் சூழ்ச்சி செய்யவில்லையா..?
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2: 153)