Breaking
Mon. Dec 23rd, 2024

வெளிநாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கான சர்வதேச விலை மனுக்கோரல் (Tender) நாளை (31/ 10/ 2017) நிறைவடைய உள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரிசிக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையிலேயே, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு 03 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

இந்த வகையில் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக, இலங்கைக்கு தருவிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டிருந்தார்.

30,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியையும், 70,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க 17,000 மெட்ரிக் தொன் நாட்டரிசி இதுவரையில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக இந்த அரிசியை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பாவனையாளர்களுக்கு இந்த நாட்டரிசி கிலோ 74 ரூபாவுக்கு வழங்கப்படுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

“எஞ்சிய 53,000 மெட்ரிக் தொன் நாட்டரிசி அடுத்தமாத நடுப்பகுதிக்குள் வந்து சேரும். 30,000 மெட்ரிக் தொன் சம்பாவை அடுத்த மாத நடுப்பகுதியில் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். குறிப்பிட்ட தொகையான சம்பா அரிசியானது அடுத்த மாத இறுதிக்குள் வந்து சேர்ந்து விடும். தற்போது சம்பா அரிசியானது கிலோ ஒன்று 80 ரூபாவுக்கு விற்கப்படுகிறது” என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியும் நவம்பர் மாத இறுதிக்குள் வந்து சேர்ந்துவிடுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Related Post