Breaking
Mon. Dec 23rd, 2024

நாளுக்குநாள் வேலைத்தேடி அரேபிய தீபகற்பத்திற்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தகைமைக்கு தகுந்த தொழில், கூடிய ஊதியம் என உழைப்பு ஒன்றை நோக்காக கொண்டே இந்த படையெடுப்புகள் நடந்தேறுகின்றன.
இவ்வாறானதொரு சூழலில் நமது சொந்தபந்தங்கள், நண்பர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாசத்தின் விளைவாக பண்டங்களை பரிமாறிக்கொள்வது வழமை. கத்தார், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் என எந்த நாடுகளை எடுத்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி ஒப்பந்தம் செய்தாக வேண்டும்.
என்னத்தான் தொழிற்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த போதும் நாம் சற்று தொலைவிலேயே உள்ளோம். அந்தவகையில் நமது பிள்ளைகள், நமது கணவன்மார்கள், நமது தந்தைமார்கள் ஒரு நாளைக்காவது எமது கையால் செய்த உணவினை உண்ணட்டும் என விதவிதமாக தயாரிப்புக்கள் செய்யப்பட்டு அரேபிய நாட்டை வந்தடைகின்றன. இந்த பண்டமாற்றுகள் பெரும்பாலும் உணவு பொருட்களாகவே இருக்கின்றன.
“அரபு நாட்டில் இல்லாததுவா உன் ஊரில் இருந்துவிட போகிறது” பட்சி கேட்பது புரிகிறது. அரபுநாட்டு உணவில் பணம் கலந்துள்ளது. எனதூர் உணவில் பாசம் கலந்துள்ளது நான் சொன்னது சரிதானே.
இந்த பண்டமாற்றுகள் வெறுமனே நடந்து விடவும் மாட்டாது. அங்கே முகப்பத், நட்பு தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பிட்டளவு சுமையே விமானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நட்பு ரீதியாக, முகப்பத் ரீதியாக ஒருவரை தெரிந்தால் மாத்திரமே இப்பண்டமாற்றுகள் சாத்தியமாகும்.
இந்த முகப்பத், நட்புக்கு துரோகம் செய்யும் கீழ்த்தரமான வேலைகள் நடந்தேருவதால் அனைவரையும் சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய நிலைமை. ஒருவன் கெட்டுபோக எண்ணினால் கெட்டுப் போகட்டும். ஆனால் இன்னொருவன் வாழ்கையில் விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா.
கஞ்சா, தம்பாக் என இன்னோரன்ன தடைசெய்யப்பட்ட பாவனை பொருட்கள் என தெரிந்தும் அடிமை மயக்கத்தில், குறுகிய வருவாய் உழைக்கும் நோக்கில் நமது நாட்டிலிருந்து இந்த அரபு நாடுகளுக்கு விநியோகிக்கப் படுகின்றன. இதற்கு இந்த பாசத்தினை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்பது கவலைக்குரியத்தொன்றாகும்.
நாம் என்ன பகுத்தறிவு அற்றவர்களா.! நல்லது கெட்டது அறியாதவர்களாக.! அரேபிய சட்டங்கள் தான் என்னவென்று தெரியாதவர்களா.! போதும், திருடர்களாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல அவர்களால் பார்த்து திருந்தாவிட்டால் அதனை ஒழிக்க முடியாது.
எனவே நட்பினை, முகப்பத்தினை பார்த்து ஏமாந்தது போதும், இனியும் ஏமாந்து எமது வாழ்க்கையினை அழிக்க முடியாது, எமது இலக்குகளை தொலைக்க முடியாது. அதற்காக எல்லோரையும் குறை சொல்லவும் இல்லை. பண்டங்கள், பொதிகளை வாங்கலாம். அதேநேரம் சுங்க திணைக்களத்தின் பணியை செய்தாக வேண்டும். அது வேறொன்றுமில்லை, பொதிகளை உங்கள் முன் பொதி செய்யுங்கள், அல்லது பரிசோதித்து வாங்குங்கள்.
இதனால் அனாவசிய இடியப்ப சிக்கல்களிலிருந்து எம்மையும், எம் சமூகத்தையும் பாதுகாத்து கொள்ள முடியும். கார்கோ மற்றும் பண்டமாற்று நிலையங்களில் பரிசோதனை ஏன் செய்கிறார்கள்.? வீணான வேலையா அது, இல்லை. எம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
உழைக்க வந்த இடத்தில் உழைப்பே முதன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய வீணான வேலைகள் எதுவும் இருக்க கூடாது. அந்நாட்டு சட்டதிட்டங்களை மிதிக்காது பணி செய்வோமானால் நாம் மட்டுமல்ல நம் சுற்றத்தார்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.
அரேபிய சட்டதிட்டங்கள் – ஆபத்தானவை – அவதானிப்புடன்..

எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – கத்தாரிலிருந்து

Related Post