Breaking
Fri. Nov 15th, 2024

ரமழான் மாதம் முடியும் வரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு மூடி வைக்க இஸ்ரேல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிவாசல் வளாகத்தில் வழிபாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸாருக்கு இடையில் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித மாதம் முடியும் அடுத்த வாரம் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரமழான் மாதத்தில் யூதர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் வருவதை ஒட்டி கடந்த ஞாயிறு தொடக்கம் நாளாந்தம் காலை வேளையில் முஸ்லிம்களுக்கும் இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகிறது.

இஸ்ரேலிய பொலிஸாரின் ரப்பர் குண்டு தாக்குதல்கள் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகங்களால் கடந்த ஞாயிறன்கு ஏழு பலஸ்தீனர்கள் கிழக்கு ஜெரூசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டது.

சம்பிரதாயமாக ரமழான் மாதத்தின் கடைசி 10 தினங்களிலும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலத்திற்கு முஸ்லிம் வழிபாட்டாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படும் நிலையில் இஸ்ரேல் யூதர்களை அனுமதித்ததாலேயே குழப்பம் ஏற்பட்டதாக பலஸ்தீன நிர்வாகம் குற்றம்சாட்டியது.

டெம்பில் மவுன்டன் என இஸ்ரேலியர்களால் அழைக்கப்படும் இந்த பகுதி யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர். இங்கு யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு வருகைதர அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.

By

Related Post