நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
இதன்போது, உரையாற்றிய அஷ்ரப் தாஹிர் எம்.பி,
“ஆரம்ப கல்வியை இலவசமாகக் கற்பிக்கின்ற, நவீனமயப்படுத்தப்பட்ட இப்பாடசாலையை, நாம் தவிசாளராக இருந்த காலத்தில் ,அனைத்து சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் அறிமுகப்படுத்தியிருந்தோம்.
குறித்த பாடசாலை, இன்று வளர்ச்சி கண்டிருப்பதை நினைத்து அகமகிழ்வதுடன், இப்பாடசாலையின் தலைமை ஆசிரியை ரெளபா உட்பட சுஹ்தா மற்றும் பெளஸானா ஆகியோரின் தியாகங்கள் மற்றும் அவர்களுடைய உழைப்புக்களை பாராட்டி வாழ்த்துகின்றேன். மேலும், இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நிகழ்வில், கட்சியின் முக்கியஸ்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.