2014ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி இடம்பெற்ற அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் இந்த மனுக்கள் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
தர்கா நகரினைச் சேர்ந்தவர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ், ஜே.சீ.வெலியமுன, சாலிய பீரிஸ் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மன்றில் ஆஜரானர்.
தர்காநகர் கலவரத்தை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாரிய உயிர் மற்றும் சொத்துச் சேதம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் கலவரத்தை தடுக்க பொலிஸார் கடும் முயற்சி எடுத்ததாக அரசதரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
கலவரத்துடன் தொடர்புடைய 47 பேர் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 300 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பங்குபற்றலுடன் அளுத்கம நகரில் இடம்பெற்;ற கூட்டத்தினை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.