Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு –

அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல. ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக காடைத்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அவர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் இருக்கின்றன. நேற்றிரவு தீக்கிரையான இதே எரிந்த இதே கடை ஏற்கனவே 2005 ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டும் தீக்கிரையாக்கப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

2014 ஆம் ஆண்டு இனவாதிகளின் அராஜக நடவடிக்கைகளினால் எரித்து நாசமாக்கப்பட்ட இந்த வியாபார நிலையத்தை அதன் உரிமையாளர் மீண்டும் மாடிகளுடன் நவீனமயமாக புனரமைத்து வியாபாரத்தை நடத்தி வந்தார் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இந்தப் பின்ணணியில் இந்தச் சம்பவமும் அதையொற்றிய செயலாகவும் சதி முயற்சியாகவும் இருக்கலாமென்ற நியாயமான சந்தேகம் அங்கு வாழும் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் அளுதகம, தர்கா நகர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான நாசகார செயல்கள் இடம்பெற்று வருகின்ற போதும் இற்றைவரை அந்தப்பிரதேசத்திற்கு ஒரு தீயணைப்புக் கருவியேனும் வழங்கப்படவில்லை என்பதையும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 எனவே இந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை கண்டறிவதன் மூலமே சமூக ஒற்றுமையை தொடர்ந்து நிலை நாட்ட முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச்சம்பவம் திட்டமிட்டுச் செய்யப்பட்டிருந்தால் உரியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

By

Related Post