Breaking
Mon. Dec 23rd, 2024

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  இடம்பெற்ற கொடூர யுத்தம் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வடமாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தென்னிலங்கைக்கு வந்து குடியேறினர்.

தமிழ் மக்களில் அநேகர் யுத்தக்கோரத்தைத் தாங்கமுடியாமல் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். மொத்தத்தில் எல்லா சாராரும் பாதிக்கப்பட்ட போதும், வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் வேரொடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டனர்.

அகதிகளாக வாழும் வடக்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னும் தென்னிலங்கையிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இழந்த கட்டுமானங்களைப் புனரமைக்க முடியாதும், வாழ்வாதாரத்துக்கு வடக்கிலே உடனடி வளங்கள் கிடைக்கப்பெறாமையும், தென்னிலங்கையில் 26 வருட காலமாகக் காலூன்றிய தமது வாழ்க்கையை திடீரெனே இன்னுமொரு இடத்துக்கு மாற்றுவதில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களும், காணிப் பிரச்சினையும் இதற்குப் பிரதான காரணங்களாகும்.

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தென்னிலங்கையிலே வாழும் முஸ்லிம்களில் சிலர் அங்கு படிப்படியாகக் குடியேறத் தொடங்கியுள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் றிசாத், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளும், அதனால் அவர் படுகின்ற அவஸ்தைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மக்களின் அடிப்படை வசதிகளையும் வீடில்லாப் பிரச்சினையையும் தீர்த்துவைக்கும் நோக்கில் வெளிநாட்டு, உள்நாட்டுப் பரோபகாரிகளின் உதவியைப் பெற்று, படிப்படியாக தீர்த்து வருகின்றார்.

வடக்கிலே கமத்தொழிலையே பிரதான ஜீவனோபாய முயற்சியாக மேற்கொண்டு வந்த மன்னார் மாவட்ட மூவின விவசாயிகளும், மீண்டும் தமது இடங்களுக்குச் சென்று விவசாயத்தை மேற்கொள்வதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். செய்கை பண்ணப்பட்ட காணிகள் காடாகிக் கிடக்கின்றன. மேட்டுநிலக் காணிகளும், விவசாயக் காணிகளும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினைக்கு மேலதிகமாக இன்னுமொரு பாரிய பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 03 தசாப்தகால யுத்தத்தினால் வடக்கிலுள்ள பன்னூற்றுக்கணக்கான குளங்கள் அழிவடைந்தும், காடாகிப் போயும், தூர்ந்தும், குளக்கட்டுக்கள் உடைந்தும், மழைநீரைத் தேக்கிவைக்க முடியாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட விடய அமைச்சர்களிடமும் பலதடவைகள் எடுத்துச் சொன்னதன் விளைவாக அதற்கு கடந்தவாரம் பிரதிபலன் கிடைத்தது.

ஏற்கனவே பெரியமடு, கட்டுக்கரை உட்பட பல குளங்களை தனது சக்திக்குட்பட்ட வரை அரசின் உதவியுடன் புனரமைத்துக் கொடுத்த அமைச்சர் றிசாத் பதியுதீனின் அடுத்த நகர்வாக, மன்னார் மாவட்டத்தில் வியாயடிக்குளம், அகத்திமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களை புனரமைப்பதற்கான அனுமதியை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் விளைவாகப் பெற்றுள்ளார். அத்துடன் வெள்ளாங்குள பிரதேசத்தில் கூராய்க் குளத்தைப் புனரமைப்பதன் மூலம் பல்லாயிரம் ஏக்கரில் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியுமென்று நீர்ப்பாசன அமைச்சரிடம் சுட்டிக்காட்டி, அதற்கான சாத்தியக்கூற்று அறிக்கையையும் நீரப்பாசன உயரதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

திட்டங்களைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக அமைச்சர் றிசாத் அண்மையில் நீர்ப்பாசன உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் குறிப்பிட்ட குளங்கள் அமைந்திருந்த பிரதேசத்துக்குச் சென்று களநிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பினார்.

இந்தக் குளங்கள் புனரமைக்கப்பட்டால் மீளக்குடியேறியுள்ள விவசாயக் குடும்பங்கள் பயிர்ச் செய்கையிலும், உணவு உற்பத்தியிலும் தங்களை ஈடுபடுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் விவசாயப் பொருளாதாரத்துக்கும் வலுசேர்ப்பர் என நாம் துணிந்து கூறலாம்.

 

By

Related Post