Breaking
Fri. Dec 27th, 2024
தேசிய பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதற்கு நாம் பல தடவைகள் வௌிப்படுத்திய கண்ணியமான நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாக பயன்படுத்த தவறிவிட்டது எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தலுக்கான அறிவிப்பொன்று இன்னமும் வௌியிடப்படாத நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கருத்தை நிராகரிக்காது ஆழமான கவனத்தில் எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் அக்கட்சி அனைவரும் ஏறறுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.அந்த வகையில் இச்சந்தர்ப்பத்தினை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஷபக்ஷ விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலத்திலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் இலகுவாக இந்த நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்த்து நிலையான சமாதனாத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருந்திருக்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பெற்று கௌரவமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் எழுத்து மூலமாக உட்பட பல்வேறு வழிகளில் எமது நல்லெண்ண வௌிப்பாடுகளைச் செய்திருந்தோம்.
யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசேடமாக காணிவிவகாரம், இராணுவ மயமாக்கல், இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விடயங்கள் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல வழிகளில் நாம் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது கைகூடியிருக்கவில்லை.
நாம் கண்ணியமாக வௌிப்படுத்திய நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது. தற்போதும் கூட அதற்கு தயாராகவே இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறான கருத்தை வௌியிட்டிருகின்றார். இந்தக் கருத்தை நாம் நிராகரிக்க மாட்டோம். தற்போது தேர்தலுக்கான அறிவிப்பொன்று வௌிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாம் இதுவரையில் எவ்விதமான தெரிவுகளையும் செய்யவில்லை. அந்த அறிவிப்பு வௌியிடப்பட்டதும் அது தொடர்பில் நாம் கூடிய ஆராய்வோம். அச்சந்தர்ப்பத்தில் அமைச்சருடைய கருத்து தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்துவோம் என்றார்.

Related Post