Breaking
Wed. Nov 20th, 2024

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சத்தின் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முற்போக்கு முன்னணி ஆகிய இணைந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையிலான கோரிக்கையொன்றை இன்று  காலை (20) உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்துள்ளதாகவும் எமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் அரசிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும்; அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாத்தில்; இன்று மாலை உரையாற்றிய  போது பிரதியமைச்சர் அமீர் அலி சிறுபான்மை மக்களின் மனக்கிலேசங்கள் தொடர்பில் பல விடயங்களை சிலாகித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படக்கூடாது என்று நாங்கள் பல தடவைகள் வலியுறுத்திய போதும் எமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட போதும் இன்று வரை காத்திரமான பதில் எமக்கு வழங்கப்படவில்லை

நாட்டிலே பொதுவாக மாற்றம் வரவேண்டும் என்பதில் எமது கட்சிக்கு எந்தமுரண்பாடும் கிடையாது ஆனால் தேர்தல் திருத்தச் சட்ட மூலங்கள், பிரதிநிதித்துவத்தை குறைக்குமளவுக்கு இடம்பெறுமானால் அவற்றுக்கு நாங்கள் இடமளிக்க முடியாது. உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் எமக்கு எற்பட்ட படிப்பினைகளும் ஏற்கனவே இதனால் இழந்த துர்ப்பாக்கிய நிலைகமைகளும் எமது கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் இன்று சமரப்பிக்கப்படும் சட்ட திருத்த மூலத்தை ஆதரிப்பதில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் எமக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கின.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக அதிகரிக்கும் சட்டமூலத்துக்கு நாங்கள் எதிர்ப்பில்லாத போதும், அவசர அவசரமாக இந்தச் சட்ட மூலத்தில் திருத்தங்களை கொண்டுவந்து குழுநிலையில் அதனை விவாதித்து இதனை உடனடியாக நிறைவேற்ற முனைவதே எமக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக மாற்றுமாறு எல்லை நிர்ணய அறிக்கையில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்கித் தருமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். எமது கோரிக்கைகள் சட்டத்துக்கு முரணாக இருக்கின்றது என்று எவரும் கருதக்கூடாது. இக்கோரிக்கைகள் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த விடயமாக இருப்பதால் அந்த மக்களின் குரலை நசுக்கக்கூடாதென யார் யார் விரும்புகின்றார்களோ அவர்கள் எமக்கு இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சுஐப் எம் காசிம்.

Related Post