Breaking
Mon. Dec 23rd, 2024

– சுஐப் எம்.காசிம் – 

மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல் மற்றும் கஹடகஹ கிரபைட் தலைவர் எஸ்.எஸ்.பி. மஜீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்துக்கு, காலத்துக்கு காலம் வந்து படம் காட்டிக்கொண்டு இருக்கின்றது. அவர்கள் காட்டுகின்ற இந்தப் படம் தற்போது புஸுவானமாகி வருகின்றது.

பழைய நாடகங்களையும், அலையலையாக திரண்டு வரும் மக்களையும் காட்டி நமது சமுதாயத்தை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. ஆனால், மக்கள் இவர்களின் சாகசங்களை இனியும் நம்பத் தயாரில்லை. இங்கு வந்து யானைகளைக் கொண்டு வந்து கட்டுவோம், பூனைகளுக்கு மணி கட்டுவோம் என்று கூறியவர்கள் எமக்கு எதுவுமே செய்யவில்லை .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற இன்னோரன்ன கட்சிகளுக்கு வலுவூட்டிக்கொண்டு இருந்தவர்கள், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து, அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்தத் தலைமை ஒரு துணிவான தலைமை. தூரதிருஷ்டி உள்ள தலைமை. கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றும் தலைமை. சொல்வதைச் செய்யும் தலைமை. செய்வதைச் சொல்லும் தலைமை. குறைவாகச் சொல்லி, நிறைவாகச் செய்யும் தலைமை. அம்பாறை மாவட்ட மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை, கடந்த சில நாட்களாக நிறைவேற்றி வருவதைக் கண்டு நான் பூரிப்படைகின்றேன். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து பச்சை, நீல, மஞ்சள் சால்வைகளுடனும் தொப்பிகளுடனும் திரியும் தலைமை அல்ல.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்துக்கு, உங்களின் பிரச்சினைகளை இணங்கண்டு கொள்வதற்காகவே வந்துள்ளது. உங்களை வளப்படுத்த, பலப்படுத்த இங்கு ஓடோடி வந்துள்ளது. நீங்கள் மு.கா தலைமையுடன், இந்தத் தலைமையையும் வைத்து நிறுத்துப் பார்க்கலாம்.

அம்பாறை முஸ்லிம்களான நீங்கள், இனியும் ஏமாற வேண்டாம். உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு வாக்குகளும் மரச் சின்னத்துக்கு எதிராக, அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக விழுந்து, மயில் சின்னத்தை வளர்க்க உதவ வேண்டுமென நான் அன்பாய் வேண்டுகின்றேன் எனக் கூறினார்.

By

Related Post