Breaking
Thu. Jan 9th, 2025

 – முகம்மது தம்பி மரைக்கார் –

ஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 18ஆவது நினைவு நாள் நேற்று முன்தினமாகும். 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று அஷ்ரப் மரணித்தார். அவரின் இழப்பு, முஸ்லிம் சமூகத்தில் இன்றுவரை நிரப்ப முடியாத இடைவெளியாகவே உள்ளது.

நேசம்  

முஸ்லிம் சமூகத்தை அஷ்ரப் ‘உண்மையாக’ நேசித்தார். அந்த நேசம், அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. அதற்கு ஏராளமான சம்பவங்கள் சாட்சிகளாக இருந்துள்ளன.

அரசியலை வைத்து, முஸ்லிம் சமூகத்தின் கணக்குகளை, அஷ்ரப் பார்க்கவில்லை. அதனால்தான், முஸ்லிம் அரசியலின் அடையாளமாக, அவர் இன்னும் பார்க்கப்படுகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக, வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே அஷ்ரப் இருந்தார். அதுவே, முஸ்லிம் அரசியலின் வசந்த காலமாக, இன்று வரை பேசப்படுகிறது. அதற்குப் பிறகு, அஷ்ரப்பின் பெயரைச் சொல்லியும் அஷ்ரப் போல் வேடமிட்டுக் கொண்டும், அரசியல் செய்ய வந்த எவரும், அந்த வசந்த காலத்தை, முஸ்லிம்களின் கனவுகளில் கூட, கொண்டுவரவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

தனிமனித வாழ்க்கையில், பலமும் பலவீனங்களும் கலந்த மனிதராக, அஷ்ரப் இருந்தார் என்கிற விமர்சனம் உள்ளது. ஆனால், அரசியல்வாதியாகக் கடைசிவரை, பலம் மிக்க ஒரு ‘கிங் மேக்கர்’ ஆகத்தான் (King Maker) அவர் வாழ்ந்து மறைந்தார். அதனால்தான், பிரேமதாஸ போன்ற பெரும் அரசியல் தலைவர்கள், அஷ்ரப்புடன் கைகுலுக்க விரும்பினார்கள்.

அஷ்ரப், ஒரு பிறவித் தலைவர் என்பதை, அவரின் வாழ்க்கையைத் தெரிந்தோர் அறிவார்கள். அதனால்தான், அவருக்கு முன்னராகவே, அமைச்சர்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த பலரை, தனது அரசியல் பாசறைக்குள், அவரால்  கொண்டுவர முடிந்தது.

உதாரணமாக, அஷ்ரப் பிறந்த மண்ணில், அஷ்ரப்புடன் அரசியல் ரீதியாக முட்டி மோதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் போன்றோர், பின்னாள்களில் அஷ்ரப்பின் அரசியல் தலைமையை ஏற்றுக் கொண்டமையானது, அஷ்ரப்பினுடைய தனித்துவமான தலைமைத்துவத்துக்கு அத்தாட்சிகளாகும்.

கனவுகள்  

முஸ்லிம் சமூகம் பற்றி, அஷ்ரப் கண்ட கனவுகள் ஏராளமுள்ளன. அவரின் மரணத்துடன் அந்தக் கனவுகளும் கருகிப் போய் விட்டனவா, என்கிற கேள்விகளும் இருக்கின்றன.

கப்பல், துறைமுகங்கள் அமைச்சராக அஷ்ரப் இருந்து கொண்டு, பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒலுவிலுக்குக்  கொண்டுவந்த துறைமுகம், இன்றுவரை இயங்காமல் இருப்பதும், தான் – ஒலுவிலில் வாழ்வதற்காக, அஷ்ரப் நிர்மாணித்த வீடு, அரையும் குறையுமாக, காடு வளர்ந்து கிடப்பதும், அவரின் கனவுகள் உயிர்ப்புடன் இல்லை என்பதற்குச் சின்னச் சின்னச் சான்றுகளாகும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களை, ஒரே கூரையின் கீழ்க் கொண்டுவருவதற்கு, அஷ்ரப் ஆசைப்பட்டார். அதனால்தான் பதியூதீன் மஹ்மூத், ஏ.ஆர். மன்சூர், டொக்டர் ஜலால்தீன் போன்ற பலரை, முஸ்லிம் காங்கிரஸினுள்ளும் அதன் நிழலுக்குள்ளும் அழைத்து வந்தார்.

ஆனால், அஷ்ரப் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸுக்குள் அவரின் ‘தளபதி’களாக இருந்த பலர், இப்போது அந்தக் கட்சிக்குள் இல்லை என்பது, ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு சடங்கு போல், அஷ்ரப்பை நினைவுகூருதல் ஏற்புடையதல்ல. அஷ்ரப்பின் கனவுகளும் அபிலாஷைகளும் காய்ந்து, சருகாகிக் கிடக்கும் போது, அஷ்ரப்பை நினைவுகூருவதில் மக்களுக்கு என்ன பயன்?

அஷ்ரப்பின் கனவுகளுக்கு, உயிர் கொடுப்பதன் மூலமாகத்தான், அஷ்ரப்பை நினைவுகூர முடியும். அஷ்ரப்பின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான், அவரை நினைவுகூர முடியும் என்பதை, நமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அறியாமலில்லை.

சவால்  

ஆனால், அஷ்ரப்பின் கனவுகளை உயிர்ப்பித்தல் என்பது, அரசியலில் சவாலான விடயமாகும். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பலியெடுக்கும் வகையில், கலப்புத் தேர்தல் முறைமையை, பேரினவாதிகள் கொண்டு வந்த போது, அதை எதிர்க்க முடியாத முஸ்லிம் அரசியல் தலைவர்களால், அஷ்ரப்பின் கனவுகளை உயிர்ப்பிக்க முடியாது.

முஸ்லிம்களின் நிலங்களை வனப் பாதுகாப்பு என்ற பெயராலும், புத்தரின் பெயராலும் பேரினவாதம் அபகரிக்கும் போது, அவற்றைப்  பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளால், அஷ்ரப்பின் அபிலாஷைகளுக்கு நீரூற்ற முடியாது.

அரசியலில், அஷ்ரப்பாக இருப்பவர்களாலும், இருக்க நினைப்பவர்களாலும் மட்டுமே, அவரின் கனவுகளையும் அபிலாஷைகளையும் மெய்ப்பிக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் அரசியலில், இதுவரை அஷ்ரப்புக்குப் பின்னர், அவர் ‘மாதிரி’யாவது, யாரும் வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அஷ்ரப் ஆரம்பித்த கட்சிக்கு வெளியில், அவர் நேசித்த பலர் இருப்பதும், அஷ்ரப்பின் ‘வாசம்’ கூட அறியாதவர்கள், அஷ்ரப்பினுடைய கட்சியின் உச்சத்தில் இருப்பதும், அரசியல் விசித்திரமாகும்.

மேற்சொன்ன கசப்புகளுக்கும் விசித்திரங்களுக்கும் இடையில்தான், அஷ்ரப் நினைவுகூரப்படுகிறார்.

முஸ்லிம்களைக் கல்வியில் விழிப்புணர்வு பெற்றதொரு சமூகமாகப் பார்ப்பதற்கு, அஷ்ரப் ஆசைப்பட்டார். அதற்காகவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் அமைத்தார்.

ஆனால், இப்போதுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களில் கணிசமானோர், முஸ்லிம்களை ‘அரசியல் குருடர்களாக’ வைத்திருப்பதற்கே விரும்புகின்றார்கள் என்பதை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் உணர்த்திச் செல்கின்றன.

விவரிக்க முடியாத வலி 

அஷ்ரப்பின் மறைவு, முஸ்லிம் சமூகத்துக்கு எத்துணை இழப்பு என்பதை, ஒரு கட்டுரையினூடாக, விளக்கி விட முடியாது. அஷ்ரப் மறைந்த போது, தன்னை, அரசியல் அநாதை போல, முஸ்லிம் சமூகம் உணர்ந்தது.

அஷ்ரப்பின் திறமைகளை, அவரின் எதிராளிகளும் நேசித்தார்கள். அதனால், அஷ்ரப்பின் மறைவின் போது, அவரின் எதிராளிகளும் அழுதார்கள். அஷ்ரப்பின் இராஜதந்திரம், நாடாளுமன்ற உரைகள், அரசியல் திமிர் போன்றவற்றை, இன்றும் பலர், சிலாகித்துப் பேசுவதைக் காண முடியும்.

அஷ்ரப்பிடமிருந்த அரசியல் திமிர், பல இடங்களில் அவரை அண்ணார்ந்து பார்க்க வைத்தது. அரசியலில் அவர், விலைபோகாத ஒரு தலைவனாக இருந்தார்.

அஷ்ரப்பின் அரசியல் குறித்து, சின்னச் சின்ன விமர்சனங்கள் இல்லாமலில்லை.  ஆனாலும், தனது அரசியலுக்காகத் தனது சமூகத்தின் நலன்களை, ஒரு போதும் அவர் விற்று விடவில்லை.

அதனால்தான், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகி விட்ட நிலையிலும், அவருடைய சமூகத்தால் நினைவுகூரப்படுகிறார்.

வரலாறுகளில், நாம் படிக்கும் பெரும் போராட்ட வீரர்களைப் போல், முஸ்லிம் அரசியலுக்குள் அஷ்ரப் இருந்தார். தங்கள் தலைவனாக, மக்கள் அவரை வாரியணைத்துக் கொண்டனர். அவருக்காகவும், அவரின் வெற்றிக்காகவும் மக்கள் நோன்பிருந்தார்கள்.

அவரின் வெற்றியை, தங்களின் வெற்றியாக மக்கள் உணர்ந்தார்கள். அதனால்தான், அஷ்ரப்பின் இழப்பானது, முஸ்லிம் சமூகத்துக்குள், தாங்க முடியாத பெரும் வலியாக உணரப்பட்டது.

அரசியலில் அஷ்ரப்பின் மரணம், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் அமைந்தது. அவரின் மரணம், சிலரைப் பணக்காரர்களாக்கியது; சிலருக்குக் கிரீடங்களைச் சூட்டியது.

ஆனாலும், அவர்களில் பெரும்பாலானோர், அஷ்ரப்பைக் கிட்டத்தட்ட மறந்தே விட்டனர். இருந்தபோதும், தங்கள் ‘அரசியல் வியாபாரத்தை’ தொடர்ந்தும் நடத்த வேண்டும் என்பதற்காக, அவர்கள் அஷ்ரப்பை நினைவுகூருகின்றனர்.

வயற்காரனின் கதை  

‘தமிழ் மிரர்’ இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், அஷ்ரப்பின் நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் எழுதியிருந்த கட்டுரையொன்றின் ஒரு பகுதியையும் அதன் முக்கியத்துவம் கருதி, இங்கு மீளவும் பதிவிடுகின்றோம்.

‘அவர் வயற்காரனாக இருந்தார்’ என்கிற தலைப்பில், அந்தக் கட்டுரையில் அஷ்ரப்பை நாம் நினைவுகூர்ந்திருந்தோம். உணர்சிமிக்க அந்த வரிகள் இவைதான்.

‘அவர் வயற்காரனாக இருந்தார். முஸ்லிம் சமூகம் எனும் நெல் வயலை, அவர் காவல் செய்தார். அந்த வயலை மாடுகள் மேயாமலும், பறவைகள் உண்ணாமலும், யானைகளும் பன்றிகளும் வந்து அழித்து விட்டுச் செல்லாமலும் அவர், கண் விழித்துக் காவல் காத்தார்.

அவர் வயற்காரனாக இருந்தபோது, விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனாலும், அந்த விளைச்சலைப் பெறுவதற்காக, அவர் கடுமையாக உழைத்தார். அவரின் காலத்திலும், அந்த வயலில் களைகள் இருந்தன. அவற்றை அவர், இலாவகமாகப் பிடுங்கி எறிந்தார்.

அவரின் காலத்துக்கு முன்னர், குத்தகைக்கும் அடைமானத்துக்கும் கொடுக்கப்பட்டிருந்த வயலை, அவர் மீட்டெடுத்தார். அவரின் காலத்தில், அந்த வயலுக்குச் சொந்தக்காரனாகவும் வயற்காரனாகவும் அவரே இருந்தார்.

அவர், அந்த வயலை மிகவும் நேசித்தார். அதனால், அதை அவர், மிக நன்றாகப் பராமரித்தார். அந்த வயலுக்குத் தேவையான வாய்க்கால்கள், வீதிகள், பரண், புரை என்று, ஒவ்வொன்றையும் அவர் இரசித்து இரசித்து அதன் தேவை உணர்ந்து, அமைக்கத் தொடங்கினார்.

அவர் வயற்காரனாக இருந்தபோது, அந்த வயல் செழிப்பாக இருந்ததாகப் பலரும் பேசிக் கொண்டார்கள்.

அஷ்ரப் என்கிற அவர், முஸ்லிம் சமூகம் எனும் நெற்பயிர்களின் வயற்காரனாக இருந்தார்.

16 செப்டெம்பர் 2000 ஆம் ஆண்டு.

திரும்பி வர முடியாத தூரத்தில், ஒரு பொழுது வயற்காரன் ஆகாயத்தில் கரைந்து போனான். வயல் அதன் பாதுகாப்பை இழந்தது; வெள்ளத்தால் அழிந்தது; மாடுகள், வயலைக் கேட்பாரின்றி மேய்ந்தன. யானைகளும் பன்றிகளும் வயலை மீண்டும் அழிக்கத் தொடங்கின. வயலில் களைகள் நிறைய முளைத்தன.

பின்னர் ஒரு தடவை, வரம்புகளால் வயல் துண்டாடப்பட்டது. வயற்காரனின் சந்ததிகளாகச் சொல்லப்பட்டவர்கள், துண்டாடப்பட்ட வயலை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்.

மிகுதியாய் இருந்த வயல் துண்டுகள், மீண்டும் அடைமானத்துக்கும் குத்தகைக்கும் கொடுக்கப்பட்டன. வயல் சோபையிழந்தது.

ஏக்கம் 

முஸ்லிம் சமூகத்துக்குள், அஷ்ரப் கொண்டு வந்த அரசியல் வசந்த காலம், அவருடனேயே இல்லாமல் போய்விட்டது.

இன்னுமோர் அரசியல் வசந்த காலத்துக்காக, முஸ்லிம் சமூகம் ஏங்கித் தவிக்கிறது.

அஷ்ரப் போன்ற இன்னுமொரு தலைவனுக்காக, இன்னும் எத்தனை வருடங்கள், இந்தச் சமூகம் காத்திருக்க வேண்டுமென்றுதான் தெரியவில்லை.

Related Post