எம்.சி.அன்சார்
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற்பணியாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து கொண்டு சிங்கள தேசிய தலைமைகளுடன் நெருக்கமான உறவை பேணி சுயநலங்களை கைவிட்டு முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்திய மறைந்த தலைவர் அஷ்ரப் கண்ட கனவு இன்று ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக நனவாகவுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையிலே- முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் நாம் எமது முஸ்லிம் அடையாளத்துடன் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துவமாக களமிறங்கியுள்ளது.
ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றமானது எமது சமூகத்தை வந்தடையவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும். அந்த மாற்றத்திற்கு சம்மாந்துறை மண்ணில் இருந்து தலைமை கொடுப்பதே எனது முதற்பணியாகும். அதுபோன்று அம்பாறை மாவட்டத்தில் பிரதேசவாதம் என்பது தற்போது சில்லறை அரசியல்வாதிகளினால் தளைத்தோங்கி காணப்படுகின்றது. இவற்றுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பேன்.
அதுமட்டுமன்றி எனது இந்த பயணத்தில் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் கிராமங்களையும், அரவணைத்து தமிழ் மற்றும் சிங்கள கிராமங்களையும், மக்களையும் இணைந்துக் கொண்டு செயற்படத்திட்டமிட்டுள்ளேன். இன மத பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் அரசியல் பயணத்தை தொடருவதே முதற் நோக்கமாகும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை தரவேண்டும் என்றார்.