–ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
திருகோணமலை மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சுமார் 17 வருடங்களாக அமர்த்தி வாசிக்கப்பட்ட அல்லது முற்றாக மறைக்கப்பட்ட ஒரு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருமலை குச்சவெளி பிரதேசத்திலுள்ள புடவைக்கட்டு என்ற கிராமத்தில் வாழும் மக்கள் அமைச்சர் றிஷாத்தை சந்தித்து, மர்ஹும் அஷ்ரபினால் கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளோ வேறு ஆவணங்களோ இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொள்வதாகவும் இந்த விடயத்தை பல அரசியல்வாதிகளிடம் கூறியிருந்தும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை எனவும் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்த விடயதானத்துடன் தொடர்புடைய அரச அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வழங்கிய பதில்கள் ஒரே விதமாகவே அமைந்துள்ளன.
“இந்த விவகாரம் தொடர்பில் எவரும் எம்மிடம் முறையிடவில்லை. எந்த அரசியல்வாதிகளும் இதனை எமது கவனத்துக்கு கொண்டு வரவும் இல்லை. நீங்கள் கூறித்தான் நாங்களே இன்று அறிகிறோம். எனவே, இது தொடர்பில் நாம் உடன் கவனம் செலுத்துகிறோம். பாதிக்கப்பட்ட மக்களை எம்மை வந்து சந்திப்பதற்கு அறிவுறுத்துங்கள்” என அந்த சிங்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் இப்போது வெளியே வந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான் இந்த விடயத்துக்கும் தீர்வு காணப் போகிறார் என்பதால் எங்கெங்கு தடைகள் ஏற்படுமோ தெரியாது.