மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும் அவர்களுக்கு வாக்களிப்பீ்ர்கள் என்றால்,எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு நீங்கள் கைசேதப்பட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனை கடற்கரை மைதானத்தில் நேற்று இரவு இடம் பெற்ற பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன்,கட்சியின் செயலாளர் நாயகம் லை.எல்.எஸ்.ஹமீட் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறியதாவது –
கிழக்கில் வாழும் சமூகம் தமது உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,இளைஞர்கள் விரக்தியிலிருந்து விடுபட்டு ஜனநாயக ரீதியான பாதையில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் மாமனிதர் அஷ்ரப் இந்த கட்சியினை உருவாக்கினார்.அன்று தீகவாபி காணி பிரச்சினை வந்த போது,பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கு தானறிந்த சிங்கள மொழியில் தொலைக்காட்சி விவாதத்தில் தோன்றி தெளிவுபடுத்தினார்.அதே போல் வடக்கில் மன்னார் முசலியில் வாழ்ந்த மக்கள் வில்பத்தினை ஆக்கிரமிப்பதாகவும்,இன்னோரன்ன புனையப்பட்ட கதையினை வைத்து முஸ்லிம்களை வெளியேற்ற இனவாதிகள் செயற்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களது சதிகளை முறியடிக்க நாம் பெரும் பிரயத்தனங்களை செய்தோம்.துரதிஷ்டம் முஸ்லிம்களின் உதிரத்தால்,தியாகத்தால் வளர்ந்த கட்சி என்று பெருமையுடன் கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமைத்துவம் மௌனித்து இருந்தது.இதுவா முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள கவலையாகும் என்று கேட்கவிரும்புகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மஙிந்த ராஜபக்ஷவை விட்டு நாம் வெளியேறினோம்.பதவிகளை ,பாதுகாப்பினை இழந்தோம்,எமக்கும்,எமது குடும்பத்தினருக்கும் கொலை அச்சுறுத்தல் இருந்தது,நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து எமது சமூகத்தினது மோட்சத்திற்காக தீர்மானங்களை எடுத்தோம்.எத்தனை கோடிகளை தருவதாக கூறினார்கள்,ஆனால் பணத்துக்காக சமூகத்தினை அடகு வைக்கும்,இயலாத்தனமான அரசியலை நாம் செய்பவர்கள் அல்ல.
எமது இலக்கு ,இலட்சியம் என்பன துாய்மையானது,எமது அகதி சமூகத்தின் விமோசனத்திற்காகத் தான் நான் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டேன்,இன்று அந்த மக்களின் பல தேவைகளை செய்து கொடுப்பதோடு,ஏனைய சமூகத்தினது தேவைகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றேன்.
வன்னியில் பிறந்த எனது உணர்வு தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்படுகின்ற போதும்,தெகிவளை வர்த்தக நிலையம் மீது தாக்குதல் தொடுக்கின்ற போது அதற்கு எதிராக வன்னியில் உள்ள நாம் சென்று போராடுகின்றோம்.அப்படியெனில் ஏன் கிழக்கில் வாழும் எமது சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை கண்டு கண்மூடித்தனமாக இருக்கும் அரசியலை எம்மால் செய்ய முடியாது.
எனவே இந்த தேர்தலில் இந்த மண்ணிண் மக்கள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை ஆதரிப்பதன் மூலம் கிழக்கில் புதியதொரு அரசியல் பரட்சியினையும்,அபிவிருத்தி வேகத்தினையும் கொண்டு செல்ல முடியும்,அதற்காக நீங்கள் அனைவரும்,ஒன்று சேருங்கள் என்று அழைப்புவிடுத்தார் அமைச்சர் றிசாத் பதியுதீன்.