Breaking
Thu. Jan 9th, 2025
இன்று வபாத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவரும் இந்நாள் செயலாளரும் நாடறிந்த உஷ்தாதுமான அஷ்ஷெய்க் முபாறக் மதனி அவர்களின் மறைவு, இஸ்லாமிய கல்விச் சமூகத்திற்கு நிரப்ப முடியாத பேரிழப்பாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“எமது நாட்டின் முஸ்லிம் தேசியத்தின் மார்க்க சொத்தாக விளங்கியது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கல்விச் சமூகத்தின் கருவூலமாக விளங்கியவர் மர்ஹூம் முபாறக் மதனி அவர்கள். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்கிற முஸ்லிம் மக்களின் மார்க்க உயர் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடாத்திக் காட்டிய அன்னாரின் பேராளுமை போற்றத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், பின் நாட்களில் ஜம் இய்யத்துல் உலமாவின் செயலாளராக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு, தீய விமர்சனங்கள் ஏதுமின்றி நிர்வாக கடமைகளை செய்து காட்டி, சமூகப் பிரச்சினைகளுக்கும் நீதமாக குரல் கொடுத்த ஒருவர்.
தனது அரபுக் கலாசாலை மூலம், நாட்டில் பல்வேறு திறமை வாய்ந்த மார்க்க அறிஞர்களை பட்டை தீட்டி வெளிக்கொணர்ந்த அவரின் பெரும் சேவை, நிச்சயம் போற்றத்தக்கது. தனது ஆளுமைகளை சமூகத்திற்காக அர்ப்பணித்தது மட்டுமன்றி, தனது ஆசிரியத்துவ பணியினால் பல்வேறு ஆலிம்களையும் உருவாக்கி தந்த பெருந்தகையை எமது முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்து விட முடியாது. இத்தனை சேவைகளையும் மகத்தான பணிகளையும் செய்த செம்மல் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு துயருற்றேன்.
அன்னார் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அவரின் சேவைகளையும் பணிகளையும் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! மேலான சுவனபதியை நசீபாக்குவானாக! ” என தெரிவித்துள்ளார்.

Related Post