Breaking
Mon. Dec 23rd, 2024

அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதியே எனக்கும் சகோதேரர் ஜெமீலுக்கும் இடையில் பிரச்சினை உள்ளதாக காட்டும் சமூக வலைத்தளங்கள் ஊடான பொய்ப்பிரச்சாரமாகும் இதனை நான் ஒரு போதும் தெரிவிக்கவில்லை. என்பதுடன் இந்த சமூக வலைத்தளங்களுக்கும் பொய் செய்திகளை சோடிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன் என அகில இங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

“சாய்ந்தமருது இளைஞர்களை ஜெமீல் வழிகெடுக்கிறார்” என்ற தொனிப்பொருளில் சிராஸ் மீராசாஹிபின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள பொய் அறிக்கை தொடர்பாகவே சிராஸ் மீராசாஹிப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது விடயமாக மேலும் அவர் குறிப்பிடும்போது,

கடந்த கால அரசியல் வரலாற்றில் கல்முனை மாநகர மக்களுக்கு நான் எவ்வாறு சேவையாற்றினேன் என்பது நியாயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு தெரியும். அந்தத் தொடரில் ஜனநாயக அடிப்படையிலும், சேவை மனப்பாங்கோடும் எமது மக்களுக்கு நான் சேவையாற்றி வருகின்றேன். இது எதிர்காலத்திலும் தொடரும். நான் இப்போது பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு துரப்படுத்துவதற்காகவும் மேலும் சகோதரர் ஜெமீலுடன் முன்பு எனக்கிருந்த சில புரிதல்களை வைத்து தற்போதும் எங்கள் இருவருக்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும் சில வங்குரோத்து உள்ளுர் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கூஜா துக்குகின்ற அடியாட்களும் என்மீது அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதில் எவ்வித உண்மையுமில்லை.

எமது அ.இ.ம.கா. கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாதவர்களின் கீழ்த்தரமான இச்ச்செயல்களை உடன் அவர்கள் நிறுத்த வேண்டும். முடிந்தால் அரசியல் ரீதியாக மக்கள் மனங்களை வெல்ல முயற்சியுங்கள். அதை விட்டுவிட்டு இவ்வாறு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மக்களின் முன் நின்று நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும். விலாசமில்லாதவர்களின் பொய் செய்திகளை தங்களது ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் எதிர்காலத்தில் இந்த வங்குரோத்து அரசியல்வாதிகளின் எந்த சூழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதற்கு கல்முனை வாழ் மக்களின் கட்சி ரீதியான ஆர்வமும் செயற்பாடுகளும் நல்ல சான்றாகும். ஆனால், அ.இ.ம.கா. கட்சியின் வளர்ச்சியை இறைவன் உதவியால் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

By

Related Post