Breaking
Fri. Nov 15th, 2024

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்;ட வேட்பாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் எமக்கு ஆதரவளித்து வாக்களித்த அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் எனது சார்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் எதுவித இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுமின்றி எமது ஜனநாயகப் போராட்டத்தில் எம்மோடு கைகோர்த்து நின்றமையை நாம் என்றென்றும் மறக்க மாட்டோம். அந்த வாக்காளர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தத்தேர்தலில் குறைந்தபட்சம் எட்டு ஆசனங்களை எமது கட்சி பெறுமென நாங்கள் எதிர்பார்த்திருந்தபோதிலும் நான்கு ஆசனங்களை மிகமிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக இழக்கவேண்டியேற்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமே. வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் வாக்குகளினால் நாம் எமது இரண்டாவது ஆசனத்தை இழந்தோம்.

அதேபோன்று புத்தளத்தில் சுமார் 1,500 வாக்குகளினால் எமது ஆசனம் பறிபோனது. மேலும் குருநாகல் மாவட்டத்தில் சுமார் ஐம்பத்து மூவாயிரம் வாக்குகளைப் பெற்ற எமது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் எட்டாம் இடத்தில் இருப்பதோடு சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் அநுராதபுரம் மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமை ஒரு வரலாற்று சாதனையாகும்.

வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றபோதிலும் எம்மீது நம்பிக்கை வைத்து ஏனைய மாவட்டங்களிலும் எமது வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்த மற்றும் வாக்களிக்காத தமிழ் முஸ்லிம் மக்களினது உரிமைகளுக்காகவும் போராடுகின்ற ஒரு பாரிய ஜனநாயகப் பொறுப்பு எம்மீது இன்று சுமத்தப்பட்டுள்ளதை நாம் வெகுவாக உணர்கின்றோம். அத்துடன் வன்னி, திருமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களே முதலிடத்திற்கு வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

தேர்தல் காலத்தில் என்மீது காழ்ப்புணர்வு கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் சில முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றைக்கூட்டி என்னைப் பற்றி அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண்பழிகளையும் பொய்யான கூற்றுக்களையும் தெரிவித்திருந்தபோதும் வாக்காளர்கள் அதனை கருத்திலெடுக்காது என்னையும் என் கட்சி சார்ந்த வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்தமையை நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றேன்.

அமையவிருக்கும் நல்லாட்சியில் எமது கட்சியும் ஒரு பங்காளியாக இருந்து கொண்டு இந்த நாட்டினுடைய தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்திற்கும் பங்களிப்பு செய்வதோடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் எமது முழுப் பங்களிப்பை செய்வோமென இவ்வேளையில் உறுதிகூறுகின்றேன்.

Related Post